உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுவதுடன் ஆயுளையும் குறைக்கிறது.

கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் அதிகரிக்காமல் இருக்கவும் உதவும் திட மற்றும் திரவ உணவு குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

மேலைநாடுகளில் குளிர்காலத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்திலும் அதிகமாக விரும்பி அருந்தும் ‘ஒயின்’ குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஒயினில் லவங்கப்பட்டை, அண்ணாசிப்பூ, க்ராம்பு போன்ற பல்வேறு வகையான மசாலா பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒருவகை ‘மசாலா ஒயின்’ உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதை தவிர்க்க உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

முறையாக தயாரிக்கப்படாத ‘மசாலா ஒயின்’ என்ற மதுவகை வேறு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உரிய ஆலோசனை இன்றி இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக திராட்சையில் இருந்து நோயெதிர்ப்பு சக்திக்குத் தேவையான ‘ரெஸ்வரடால்’ என்ற வேதிப் பொருள் கிடைக்கிறது.

இருதய நோய், கேன்சர் போன்ற நோய் வருவதில் இருந்து ‘ரெஸ்வரடால்’ பாதுகாப்பதோடு, அழற்சி நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது.

இதனுடன், மருத்துவ குணம் நிறைந்த க்ராம்பு, லவங்கப்பட்டை போன்ற பொருட்களையும் சேர்த்து பருகுவதால் இது ஆயுள் நீடிப்புக்கு உதவுவதாக டயாபெடிக் கேர் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.