டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ந்தேதி நடைபெற உள்ளது. அதுபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்  ஆகஸ்ட் 6 ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மக்களவை செயலகம்  வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ந்தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் (18ந்தேதி) குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து 25-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும். புதிய குடியரசு துணைத் தலைவர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.