டெல்லி:

வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தாய் சேய் நலம் குறித்த ஒரு கையேட்டை வெளியிட்டுள்ளார். நாட்டில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றது.

இந்த நிலையில் அந்த கையேட்டில் கர்ப்பணிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், கர்ப்பிணிகள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்தரிப்புக்கு பின் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. ஆன்மீக சிந்தனைகளை கொண்டிருந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கான மத்திய ஆராய்ச்சி குழு இந்த கையேட்டை தொகுத்து வழங்கியுள்ளது. மேலும், அந்த கையேட்டில் படுக்கை அறையில் அழகான மற்றும் நல்ல படங்களை தொங்க விட வேண்டும். இணைப்பு மற்றும் வெறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்களை மறுத்துள்ள அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தை சேர்ந்த மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேரியல் டாக்டர் மாலவிகா சபர்வால் கூறுகையில், ‘‘இது அறிவியல் பூர்வமற்ற ஆலோசனையாகும். இரும்பு மற்றும் புரத சத்து கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஒன்று. இது இறைச்சியில் தான் அதிகளவில் உள்ளது. தாவரங்களில் இருந்து இது கிடைப்பதை விட இறைச்சியில் இருந்து கிடைப்பதே சிறந்ததாகும்.

கர்ப்பிணிகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குடும்பத்தினர் அவருக்கு உதவிகரமாக இரு க்கிறார்கள் என்பதை கர்ப்பிணிகளை நம்ப வைக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு எச்சரி க்கையுடன் கூடிய தாம்பத்திய உறவுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பம் நல்ல முறையில் உறுதியான பிறகு தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.