‘விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை’ ராகுல் காந்தி

Must read

 

பெங்களூரு:

“விவசாயிகள் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை துவக்கி உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு 4 நாட்கள் பிரசார பயணத்தை துவங்கியுள்ளார்.

பெல்லாரி மாவட்டத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

இரண்டாவது நாளான நேற்று அவர் கொப்பல் மாவட்டம் குஸ்டகியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“கர்நாடக மாநிலத்தில் 2008-ம் வருடம் முதல் 2013-ம் வருடம் வரை நடைபெற்ற பா.ஜ.க. அரசு, ஊழலில் உலக சாதனை படைத்தது. அப்போது எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய மூன்று முதல்வர்களை இந்த மாநிலம் கண்டது. ஊழல் புகாரில் சிக்கிய நான்கு அமைச்சர்கள்  பதவி இழந்து சிறைக்கு சென்றனர்.

ஆனால் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து ஊழல் ஒழிப்பு பற்றியும், பா.ஜ.க.வை  ஆதரிக்கும்படியும் பேசுகிறார்.

கர்நாடகத்தில்  சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை அளித்துவருகிறது. மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் எங்கள் கட்சியின் ஆட்சி நிறைவேற்றி இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஆகவே, நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக மோடி பேசினார். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட டெபாசிட் செய்யவில்லை. இப்போது கருப்பு பணத்தை பற்றி மோடி பேசுவதே  கிடையாது. மாறாக காங்கிரஸ் கட்சி மீது தவறான புகார்களை வீசுகிறார்.

விவசாயிகள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். ஆகவே தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் இதை மோடி ஏற்கவில்லை. மாறாக பெரிய தொழில் நிறுவனங்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் நலனில் மோடிக்கு அக்கறையே இல்லை” என்று ராகுல்காந்தி பேசினார்.

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article