புதுடெல்லி: துப்புரவுத் தொழிலாளர்களின் காலை கழுவி கேமராவிற்கு போஸ் கொடுத்த மோடி, கேமரா நிறுத்தப்பட்டவுடன், அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார். அந்த தொழிலாளர்களின் உண்மையான குறைகளைக் கேட்பதற்காக காது கொடுக்கமாட்டார் மற்றும் கவலையும்பட மாட்டார் என்று தாக்கியுள்ளார் ராகுல் காந்தி.

2019ம் ஆண்டு அலகாபாத் கும்பமேளாவில், சில துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களை, பிரதமர் மோடி கழுவியதோடு, அவர்களை ‘உண்மையான கர்ம யோகிகள்’ எனவும் புகழ்ந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர், “நமது பிரதமர் எப்போதுமே விளம்பரத்தின் பொருட்டு, கேமராவிற்கு போஸ் கொடுப்பதை மட்டுமே விரும்புபவர். துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவிய அவர், கேமரா அணைந்தவுடன் அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றிருப்பார்.

அந்த தொழிலாளர்களின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி அவருக்கு கவலையில்லை. இவர் செய்த விளம்பரம் முடிந்தவுடன், அந்த தொழிலாளர்கள், தங்களின் வழக்கமான சுத்தப்படுத்தும் வேலையை செய்வதற்காக சென்றிருப்பார்கள். இதனால் அவர்களுக்கு எந்த விடிவும் கிடைத்துவிடவில்லை” என்று சாடியுள்ளார்.

– மதுரை மாயாண்டி