நாமக்கல்: நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர் குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை பூதாகரமாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும், காவல்துறை யினரும் வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக தெரிவித்து உள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது சில இடங்களில் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

முதன்முதலில் திமுகவும் சில அரசியல் கட்சிகள் மட்டுமே வடமாநிலத்தவர்கள் குறித்து கேவலமாக விமர்சித்து வந்த நிலையில், சமீபகாலமாக நாம் தமிழர் கட்சி வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசி வந்தது. இதையடுத்து பல வதந்தி வீடியோக்கள் வெளியானதால், பல வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் திரும்பி வராததால் சென்னையில் பால் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுபோல திருப்பூர்  பின்னலாடை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வி.புதுப்பாளையத்தில் உள்ள வெல்ல உற்பத்தி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கியருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், 8 குடிசைகள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன. அந்த பகுதியில் உள்ள சக்திவேல் ஆலையிலிருந்த 8 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. குடிசைகளில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் கிராமத்தில் வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணியாற்றி வரும்  வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியர்  ஸ்ரேயா சிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். மேலும், அசம்பாவிதம் தவிர்க்க அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்துக்கு வெளி மாநிலத்தவர்களே காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த தீவைப்பு சம்பவம் நடந்துள்ளது.