பெரம்பலூர்: தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டண உயர்வு, முதல்வர் அனுமதி அளித்தவுடன் அமலுக்கு வரும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  கூறிய நிலையில், தற்போது, பேருந்து கட்டணம் தொடர்பாக பொய்யான தகவல் பரப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்.  மேலும்,  அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார் என்பதையும் உறுதி  செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும், மக்கள் பாதிக்காத படி பஸ் கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப் பார்,” என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு 14ந்தேதி அன்று சேலத்தில் கூறியிருந்தார். அப்போது, மாநிலத்தின் நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்வதாக தெரிவித்தவர், மக்கள் பாதிக்காத படி பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று கூறினார்.

அதுபோல மதுரை மாவட்டம் வரிச்சீயூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்து முகாம் மற்றும் காவல் நிலையத்தை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நிதி நிலைமையை பொறுத்து பேருந்து கட்டண உயர்வு குறித்து முதல்வரும், போக்குவரத்துத் துறை அமைச்சரும் ஆலோசித்து முடிப்பார்கள் என கூறினார்.

இதற்கிடையில், பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொலைதூர பயண பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயண பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால், தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்வது உறுதியானது.

இந்த நிலையில், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பொய்யான தகவல் பரப்படுவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது. அதாவது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே அந்த மாநிலத்திற்கும், நமது மாநிலத்திற்கும் இடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணத்தை உயர்த்தப்பட வேண்டும் என்பது சட்டரீதியான நடவடிக்கைகளில் ஒன்று. அந்த அடிப்படையில் ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. அதற்கேற்றவாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஒப்பீடு செய்து கட்டண உயர்வு குறித்த பட்டியலை தயார் செய்து அளித்து இருக்கிறார்கள். அது தயார் நிலையில் உள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக பலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிவுரையும் வழங்கவில்லை.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. கேரளா, தமிழ்நாடு செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி அந்த பேருந்துகளில் மட்டுமே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர். போக்குவரத்து துறை ரூ.48,500 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை சீரழிக்கப்பட்டது. அதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 2000 புதிய பேருந்துகளும், 500 பேட்டரி பேருந்துகளும் ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட உள்ளது

அமைச்சரின் பேச்சு மக்களை குழப்பும் வகையிலேயே அமைந்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கும் செல்லும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும்போது, அதில் பயணம் செய்யும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பது மட்டுமின்றி, குறிப்பாக கேரளா செல்லும் பேருந்தில் செல்பவர்கள், கோவை, சேலம் செல்ல வேண்டியது இருந்தால், அவர்களும் கூடுதல் கட்டணம்தானே செலுத்த நேரிடும். அப்படி இருக்கும்போது, அமைச்சர் கூறும், வெளிமாநில பேருந்துக்கு மட்டும் என்ற தகவல் எப்படி சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை.

ஒருவேளை தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பாய்ன்ட் டூ பாய்ன்ட் பேருந்துகளில் மட்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுமோ… என்னவோ… அமைச்சருக்குத்தான் வெளிச்சம்… அவர் விரிவாக விளக்கம் கொடுத்தால் மட்டுமே அவர் கூறிய தகவலின் உண்மைத்தன்மை புரியும்.