சென்னை: அமைச்சா் சேகா்பாபுவின் சகோதரா் வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது ஓட்டேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது  இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை ஓட்டேரி நாராயண மேஸ்திரி மூன்றாவது தெரு பகுதியில் குடும்பத் துடன் வசிக்கிறாா். சேகா்பாபுவின் வீட்டின் அருகே அவரது சகோதரா் தேவராஜ் (எ) தேவராஜுலு (63) குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவர் நேற்று இரவு திடீரென தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.  வீட்டின் முதல் தளத்தில் உள்ள தனது அறைக்குச் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால், அவரது மனைவி குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது, தேவராஜ் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது இறங்கி,  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, அவா் இறந்துவிட்டது உறுதியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த  ஓட்டேரி போலீஸாா் தேவராஜின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.

தேவராஜ் அண்மைக்காலமாக  வயிற்ற வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக மாறுபட்ட தகவல்களும் உலா வருகின்றன. தேவராஜ் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு அவரது இல்லத்திற்கு உடனடியாக சென்ற அமைச்சரும் அவரது சகோதரருமான சேகர்பாபு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதேபோல் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேவராஜ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

தேவராஜ் உயிரிழந்த சம்பவம் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இறந்த   தேவராஜின் இறுதிச் சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் ஓட்டேரி மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.