டில்லி

வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் வரும் எந்த செய்தியையும் ஆராயாமல் நம்ப வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

எல்லைப்புற காவல் படையின் புலனாய்வுப் பிரிவு துவங்கப் பட்டது.  இதில் ராஜ்நாத் சிங் கலந்துக் கொண்டு துவங்கி வைத்தார்.   அப்போது அங்கு அவர் எல்லக் காவல் அதிகாரிகளிடையே உரையாற்றும் போது எந்த செய்தியையும் தீர ஆராயாமல் நம்பக்கூடாது எனக் கூறினார்.

மேலும், “எல்லைக்காவல் படையினருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் எந்த ஒரு செய்தி உங்களுக்கு கிடைத்தாலும் அதை தீர ஆராயாமல் நம்பி விட வேண்டாம்.  பல தேச விரோத சக்திகள் நமது அமைதியைக் குலைக்க பல வதந்திகளை பரப்பி வருகின்றனர்.  எனவே உங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு செய்தியையும் நீங்கள் பகிருமுன் அதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க வேண்டும்.

நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் வரும் செய்திகளை நம்பி பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.   அதை தீர ஆராய்ந்த பின் பகிருவதில் எந்தக் குழப்பமும் இல்லை.   ஏனெனில் அந்த செய்திகளில் பெரும்பாலானவை கற்பனைச் செய்திகளே.  மேலும் பல செய்திகள் பொய்ச் செய்திகளாகவும் உள்ளன.: என உரையாற்றி உள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், “ இது போல செய்திகளை பரப்புவதில் பொது மக்கள் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்களும் தவறு செய்துள்ளனர்.  இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி என எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.   மேற்கு வங்கத்தில் ஒரு திரைப்படக் காட்சியை இந்து-இஸ்லாமியர் கலவரம் என பா ஜ க பிரமுகர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

அதே போல பணமதிப்புக் குறைவால் ஒருவர் தூக்குப் போட்டுக்கொண்டதாக ஒரு முதல்வர் பகிர்ந்த செய்தியில் உண்மையில் அந்த தூக்குப் போட்டுக் கொண்டவர் ஒரு வங்கிக் கொள்ளைக்காரர்.  அது மட்டும் அல்ல அமெரிக்க வீரர்களின் கையில் இருந்த அமெரிக்கக் கொடியை இந்திய தேசியக் கொடியாக்கி அதை சுதந்திரப் போராட்ட புகைப்படம் என பதிந்தனர்.   அதை ஒரு காங்கிரஸ் தலைவரும் பதிந்தார்.  சுதந்திரப் போராட்டத்தில் தேசியக் கொடி பயன்படுத்தவில்லை என்றதை அறிந்துக் கொண்டு அவர் அந்தப் பதிவை நீக்கினார்.” என தெரிவித்துள்ளனர்.