சென்னை: சட்டப்பேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார்.

தமிழக சட்டசபையில்  கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 21, 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான கேள்விகளை எதிரிக்கட்சியினர் எழுப்பி வரும் நிலையில், அத்துறையை சார்ந்த அமைச்சர்கள் அதற்கு பதிலளித்து வருகின்றனர். இதனையடுத்து மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்  தாக்கல் செய்தார்.

அப்போது,  தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது. காவிரி பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது .

கர்நாடகாவில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே அணியாக உள்ளனர்.  தமிழ்நாட்டில் பல்வேறு ஆறுகள் ஓடினாலும், நாம் தண்ணீருக்காக கை ஏந்தும் நிலையில் உள்ளோம். நீங்கள் என்ன செய்தீர்கள், நாங்கள் என்ன செய்தோம் என இந்த நேரத்தில் பேச வேண்டாம்.  இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும், அனைத்து கட்சியினரும் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தார்.