சென்னை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும்  சட்டவிரோத கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு  அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பபான பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது  மனுவில், “கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத குவாரிகள் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம்.சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர்.

பொதவாக, இரண்டு யூனிட் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 யூனிட் வரை கற்கள், ஜல்லிகள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம்,  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து,  நடந்து வருகிறது. இதனை தடுக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். ஆனால், அதிகாரிகள் அதன்மீது எந்தவொரு நடவடிக்கையுமை எடுக்கவில்லை. முறையான பதிலும் இல்லை.

எனவே, கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு எதிராகவும், கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்துவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என  கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதோடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கற்கள், ஜல்லிகள் எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாக கூறுவது உண்மையா? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அரசு ப்ளீடர் முத்துக்குமார், அனுமதியின்றி குவாரிகள் செயல்படுவது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழகஅரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.