டெல்லி:
மத்திய அரசின் பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு நாடே பெரும் பரபரப்புக்குள்ளாகி விட்டது. உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில் நாட்டிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களையும் இந்த அறிவிப்பு பாடாய் படுத்துகிறது.
பாதுகாப்பு பணியை விட்டுவிட்டு ராணுவ வீரர்கள் பணம் எண்ணுவதற்கும், பணத்தை கொண்டு செல்வதற்கும், பணம் அச்சடிக்கும் அச்சகங்களில் கூலித் தொழிலாளர்களை போல் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏதோ கூலி தொழிலாளர்கள் போல் ராணுவ வீரர்கள் நடத்தபடுவதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்திய விமானப் படையை சேர்ந்த 120 ராணுவ வீரர்கள் மேற்கு மிட்நாப்பூரின் சல்போனியில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ரிசர்வ் வங்கி அச்சகத்தில் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
 

மத்திய அரசின் சொந்த முயற்சியில் கொண்டு வரப்பட்ட இந்த அவசர நிலைக்கு போலீஸ், துணை ராணுவத்தினரை தவிர்த்து ராணுவத்தையே நேரடியாக பயன்படுத்துவது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களுக்கு சண்டையிட மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அச்சடிக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை. அதனால் அச்சகத்தில் அவர்கள் கூலித் தொழிலாளர்களை போன்ற அடிமட்ட பணிகளை தான் மேற்கொள்கின்றனர்.
விமான படையினர் பணத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் பணியில் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டுள்ளனர்.
போர் விமானத்தின் பைலட்டாக பணியை தொடங்கி இன்று தலைமை அதிகாரி பொறுப்பில் இருக்கும் அருப் ராகா, தற்போது பணத்தை சுமந்து செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் தனது மகளின் திருமணத்தை முடித்துவிட்டு பணி ஓய்வை அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்ததாக அந்த பொறுப்பே ஏற்கவுள்ள பீரேந்தர் சிங்கும் தனோவா சிறந்த விமான வல்லுனர். அவரும் தற்போது பணம் சுமந்து செல்லும் வேலையை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விமானப்படை வீரர்கள் இது வரை பண போக்குவரத்துக்காக 300 மணி நேரம் பயணித்துள்ளனர். இதற்கான செலவு ரூ. 65 கோடியாகும்.
முழு கொள்ளளவை விட மிக குறைவான எடை கொண்ட பணத்துடன் விமானங்கள் இயக்கப்படுகிறது. நவம்பர் 19ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இந்திய போர் விமானங்கள் 552.7 டன் எடை கொண்ட ரூபாய் நோட்டுக்களை சுமந்து சென்றுள்ளது. ஜம்மு, கொல்கத்தா, கவுகாத்தி, அகமதாபாத், லக்னோ, நாக்பூர், மும்பை, புனே, போபால், திருவனந்தபுரம், ஐதராபாத், விசாகப்பட்டிணம், சென்னை போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் வட கிழக்கு பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்டுள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படையின் இலக்கு வேறு திசையை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.