சென்னை: புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள்  பாதிக்காத வகையில் ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தின்படி, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த கவுதமன் உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “எந்த அனுமதியும் பெறாமல், கோயிலில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் 15 அடி நிலத்தை கையகப்படுத்தும் வகையில் எல்லை வரையப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணியின் போது புராதன கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளையும், ஆகம விதிகளையும் பின்பற்றாமல் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைத்தும், சாலை விரிவாக்கம் செய்தும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தனர்.

இந்தமனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி, கோயில்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்” என மீண்டும் தெளிவுபடுத்தினார்.

மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், “விருகம்பாக்கம் கோயில் பகுதியில் மெட்ரோ ரயில் பாதை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.