விழுப்புரம்: தமிழகத்தில் ஒரே மாவட்டத்தில் முதன்முறையாக ஒரே நாளில்  1430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்து காப்பீடு அட்டையை வழங்கிய பெருமைக்குரியவர்  விழுப்புரம் ஆட்சியர் மோகன்.

தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.  மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு காப்பீடு அட்டை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அதைத்தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுக்கான அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். இது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய ஆட்சியர்  மோகன், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 13,494 ஓய்வூதியர்களில் 1,430 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2022, ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களும் கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. என்றார்.