ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19 ஆம் தேதி ராஜினாமா ? ஊடகத் தகவல்

டில்லி

ரிசர்வ் வங்கி ஆளுநர் வரும் 19 ஆம் தேதி உடல்நிலை குறைவு காரணமாக ராஜினாமா செய்ய உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட அரசின் மூன்று கோரிக்கைகளே காரணம் என கூறப்படுகிறது. அவை அரசின் நிதிப் பற்றாக்குறையை தீர்க்க ரிசர்வ் வங்கியின் நிதி ஆதாரத்தில் இருந்து ஒரு பெரும் பகுதியை மாற்ற கோரிக்க விடுத்தது, வீட்டு வசதி மற்றும் நிதி உதவி நிறுவனங்களின் நலனுக்காக செயல்பட ரிசர்வ் வங்கியை வற்புறுத்தியது, வங்கிகளின் வருமானம் மீதான செயல்பாடுகளை திருத்த எதிர்ப்பு தெரிவித்தது ஆகியவை ஆகும்.

இந்த விவகாரம் ரிசர்வ் வங்கி துணை ஆளுனர் விரல் ஆசார்யா ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக அறிக்கை வெளியிட்டபிறகே மக்களுக்கு தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கைக்கு பிறகு அரசு நேரடியாகவே ரிசர்வ் வங்கியின் அனைத்து செய்கைகளையும் விமர்சிக்க தொடங்கியது. அத்துடன் ரிசர்வ் வங்கியின் விதிமுறை 7 ஆம் பிரிவின் படி ரிசர்வ் வங்கிக்கு நேரடி உத்தரவு பிறப்பிக்க ஆரம்பித்தது.

ரிசர்வ் வங்கியின் கடந்த 83 வருட சரித்திரத்தில் இதுவரை நேரு அரசு தொடங்கி எந்த ஒரு அரசும் இவ்வாறு ரிசர்வ் வங்கி விவகாரத்தில் நேரடி உத்தரவு பிறப்பித்தது கிடையாது. இதனால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் மிகவும் மனக் குழப்பம் அடைந்துள்ளார். அத்துடன் இந்த நடவடிக்கைகளால் அவர் உடல் நலம் குன்றி உள்ளதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் போர்ட் மீட்டிங் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் உர்ஜித் படெல் தனது பதவியை உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகம், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் உர்ஜித் படேல் அலுவலகம் ஆகியவை பதில் அளிக்க மறுத்துள்ளன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Media says that Urjit patel is resinging his RBI governor post on 19 due to health reason
-=-