சென்னை: இன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி சென்னை மாநகராட்சி 35வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் கூறிய மேயர்  பிரியா சட்ட ஆலோசனை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்  இன்று மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  துணை மேயர்  மகேஷ்குமார்,  மாநகராட்சி முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி,   நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் நேரமில்லா நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு மேயர் பிரியா பதில் அளித்தார்.  அப்போது பேசிய 35வது வார்டு  மாமன்ற உறுப்பினரான மதிமுகவைச்சேர்ந்த  ஜீவன், “தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் சட்டமன்றத்தில் பேச மறுத்தது கண்டனத்து உரியது. அண்ணா, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரின் பெயரை உள்நோக்கத்துடன் சொல்லாமல் இருந்திருக்கிறார் ஆளுநர். அதனால், சென்னை மாநகராட்சி சார்பில் ஆளுநருக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை மேயர் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும்,  பகுத்தறிவு மண்ணை சீண்டிப் பார்க்கும் எண்ணம் இனி எந்த ஆளுநருக்கும் தமிழ்நாட்டில் வராத வகையில் கண்டனத் தீர்மானத்தை மேயர் நிறைவேற்ற வேண்டும்” என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, இதுதொடர்பாக  “சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநருக்கு எதிராக மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.