சென்னை:
சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர்.
ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற முதியோர்கள், பெண்கள் உட்பட பலர்  இன்றும் வெயிலில் கால்கடுக்க நின்று வருகின்றனர்.
மற்றொருபுறம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க மக்கள் வெயிலில் காத்து நிற்கின்றனர்.
atm2
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று 8ந்தேதி இரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பணத்திற்காக திண்டாடி வருகிறார்கள்.
இதன் தொடர்பாக கடந்த இரண்டுநாட்கள் மூடப்பட்டிருந்த ஏடிஎம் அனைத்தும் இன்று காலை முதல் செயல்பட தொடங்கின.
ஆனால், சென்னையில் ஒருசில இடங்களிலும்,  வெளி மாவட்டங்களிலும்,  நகராட்சி ப குதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இன்னும் நிரப்பப்படாததால்,  பல ஏடிஎம் இயந்திரங்கள் இன்னும்  செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் மேலும் அவதிக்குள்ளானார்கள்.
இன்றுமுதல் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் இயங்கும் என்றும், அதில் 50ரூபாய், 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் 50 ரூபாய் நோட்டு களே இல்லை. இது பொதுமக்களை மேலும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.
பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புதிய ரூபாய் நோட்டுக்களை பெற காலை முதலே ஏடிஎம்களில் குவித்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்தியா முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் வங்கிகளுக்குள் 1 லட்சம் ஏ.டி.எம்.களும், வங்கிகளுக்கு வெளியில் பொது இடங்களில் 1 லட்சத்து 2 ஆயிரம் ஏ.டி.எம். களும் அமைக்கப்பட்டுள்ளன.
atm
இந்த ஏ.டி.எம்.களை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முற்றுகையிட்டதால் பல ஏ.டி.எம்.களில் பணம் சிறிது நேரத்தில் தீர்ந்து விட்டது. அத்தகைய இடங்களில் உடனுக்குடன் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பினார்கள்.
ஆனால் ஒரே நேரத்தில் நாடெங்கும் பலரும் ஏ.டி.எம்.களை இயக்கியதால் நெட்வெர்க்கில் சுமை அதிகரித்தது. இதன் காரணமாக சில இடங்களில் ஏ.டி.எம்.கள் பழுதடைந்தன.
சில வங்கிகளின் ஏ.டி. எம்.கள் நெட்வொர்க் அழுத்தம் காரணமாக மிகவும் மெல்ல இயங்கின. இதனால் பணம் எடுப்பதில் பல இடங்களில் மக்களுக்கு தாமதம் ஏற்பட்டது.
 
 
 
பொதுமக்களின் வசதிக்காக, இதர ஏடிஎம்களைப் பயன்படுத்தினால் வசூலிக்கப்படும் கட்டணம் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இந்த மாதம் அந்த கட்டணத்தை தளர்த்த முடிவு  செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இதே போல, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகள் செயல்படும் என்றும், பணி நேரம் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
India Currency Overhaul
இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுகளை வாங்க காலை முதலே சென்னை ரிசர்வ் வங்கி முன் சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
பல ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ரிசர்வ் வங்கியை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
வெயிலையும் பொருட்படுத்தாமல் ரிசர்வ் வங்கிக்கு வெளியே புதிய ரூபாய் நோட்டுகளை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.