ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் புகார்: ஆதரவு தெரிவித்த மலையாள நடிகர் சங்கம்

Must read

தயாரிப்பாளர் ஸ்ரீகுமார் மேனன் மீது மஞ்சுவாரியர் அளித்துள்ள புகாருக்கு, மலையாள நடிகர் சங்கமும், திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது, கேரள திரைத்துறை வட்டாரத்தில் புதிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்த பிறகு நடிக்காமல் இருந்த மஞ்சு வாரியர் அவரை பிரிந்த பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு ஸ்ரீ குமார் மேனன் இயக்கத்தில் வெளியான ஒடியன் படத்தில் மஞ்சு வாரியர் நடத்திருந்தார். இப்படம் தோல்வியடைந்த நிலையில், அதற்கு மஞ்சு வாரியர் தான் காரணம் என்றும், அவரிடம் நஷ்ட ஈடு கோரப்படும் என்றும் தயாரிப்பாளர் ஸ்ரீகுமார் மேனன் அப்போது தெரிவித்திருந்தார். ஏனெனினும் நடிகர் மோகன்லாலின் நேரடி தலையீடு காரணமாக, அவ்விவகாரம் அப்போது முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீ குமார் மேனனுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை மஞ்சு வாரியர் கேரள டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ”இயக்குநர் ஸ்ரீ குமார் சமூக வலைதளங்களில் பொய் விஷயங்களை பரப்பி என் பெயரை கெடுக்கிறார். எனது நண்பர்களைஅவர் மிரட்டியுள்ளார். மேலும் ஸ்ரீ குமாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறேன். என் அமைப்பின் வங்கி காசோலைகள் மற்றும் அமைப்பின் லெட்டர் பேட்களை தவறாக பயன்படுத்தியுள்ளார். அதற்கான ஆவணங்களை புகாரோடு இணைத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்புக்கும் மஞ்சு வாரியர் தனது புகாரை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் பி.உன்னிகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ஸ்ரீ குமார் மீது புகார் கொடுத்துள்ளதாக மஞ்சுவாரியர் எங்களிடம் தெரிவித்துள்ளார். புகாரின் சாராம்சம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக டிஜிபியிடம் பேசியுள்ளோம். தீவிரமாக அவைகளை விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுள்ளோம். டிஜிபி தரப்பில் இதற்காக தனி விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிற உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரான இடவேள பாபு, சங்கத்தின் ஆதரவை மஞ்சு வாரியருக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மஞ்சு வாரியரிடமிருந்து எங்களுக்கு ஈமெயில் மூலம் புகாரின் நகல் கிடைத்தது. ஸ்ரீகுமார் மேனன் மீது புகார் கொடுத்துள்ள மஞ்சு வாரியருக்கு, மலையாள நடிகர் சங்கம் துணை நிற்கும். இது தொடர்பாக விரைந்து விசாரிக்க, கேரள காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதன்மூலம் மஞ்சுவாரியருக்கு ஆதரவாக கேரள திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பும், கேரள நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article