சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள  மீட்புபடையினர் தயாராக இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தெரிவித்து உள்ளார்.,

மாண்டஸ் புயல் தற்போது  சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில்  உள்ளது. இது மாமல்லபுரம் நோக்கி மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில், வந்துகொண்டிருக்கிறது.  இதனால் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்  என சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும். இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மதியம் முதலே பலத்த காற்றுடன் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  தமிழக காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடர் மீட்பு படையினரின் ஆறு குழுக்கள் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட தமிழக காவல்துறையைச் சேர்ந்த தேசிய நீச்சல் வீரர்கள் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த நீச்சல் வீரர்களை

கொண்ட 50 பேர், மீட்பு பணி தளவாடங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் கடலோர பகுதிகளில் படகுகளுடன் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், புயல் மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்கிடையே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவை தொடர்ந்து மாநகர போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு மாண்டஸ் புயல் காரணமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், ‘பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது’.

எனவே பொதுமக்கள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் தேவையின்றி வாகனங்களில் வெளியே செல்ல வேண்டாம். வீட்டிற்கு தேவையைான குடிதண்ணீர், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே கடைகளில் வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.