டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 20 வரை சுமார் நான்கு மாதம் தங்கியிருந்த நபர் அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்தார்.

இதுகுறித்த தகவல் கடந்த வாரம் வெளியாகி பரபரப்பானது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி அரச குடும்ப ஊழியர் என கூறிக் கொண்டு முகமத் ஷெரீப் என்ற நபர் இந்த விடுதியில் தங்கியதாகக் கூறப்படுகிறது.

ரூ. 23.46 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை கொடுத்த இவர் நவம்பர் மாதம் 20 ம் தேதி ஹோட்டலில் இருந்த வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த கலைப்பொருட்கள் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு மாயமானதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர் கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பிவந்த நிலையில் இவர் அபுதாபி அரச குடும்ப ஊழியர் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மாயமான முகமத் ஷெரீப்-பை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு அவர் கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மாதக்கணக்கில் தங்கிய நபர் ரூ. 23 லட்சம் கட்டணம் செலுத்தாமல் மாயம்…