புதுடெல்லி:

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்டு பிரக்யா சிங் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி, தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து பிரக்யா சிங் தாக்கூர் விலக்கு பெற்று வந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை எதிர்த்து பாஜக வேட்பாளராக பிரக்யா போட்டியிட்டார். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திக் விஜய் சிங்கை தோற்கடித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று கூறி, நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி பிரக்யா மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, இந்த வாரத்தில் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.