தி இந்து தமிழ் நாளிதழில் தி.மு.க. செயல்தலைவர் முக. ஸ்டாலின்  பேட்டி அளித்துள்ளார். அதில் ஒரு கேள்வியாக, “உங்கள் அப்பா பெரியார் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உங்கள் பாதை அண்ணா பாதையா, பெரியார் பாதையா?” என்று கேட்கப்பட்டது.

பெரியார் சிலையுடன் ஸ்டாலின் – பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின்

அதற்கு ஸ்டாலின், “ என் பாதை அண்ணா பாதை. அதேசமயம், அண்ணாவோட பாதையே பெரியார் பாதையோட நீட்சிதான்கிறதைச் சுட்டிக்காட்ட விரும்புறேன். நாத்திகராக இருந்த பெரியார்தான் ஆன்மிக உரிமைகள் எல்லா சமுகங்களுக்கும் கிடைக்கணும்னு இங்கே இறுதி வரைக்கும் போராடினார். என்னோட மனைவி கோயிலுக்குப் போற படங்களைப் போட்டு என்னை விமர்சிக்கிறாங்க. கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இது நடக்குது. ஒருநாளும் நான் தடுத்தது இல்லை. அது அவங்க நம்பிக்கை. விருப்பம். ஒரு பெண் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கங்கிறதுக்காகவே அவங்களோட விருப்பங்களைக் கைவிடணும்கிறது அடக்குமுறை. நான் அதைச் செய்ய மாட்டேன். எங்கம்மா சாமி கும்பிடுவாங்க. தலைவர் தடையா இருந்தது இல்லை. குன்றக்குடி அடிகளாரைப் பார்க்கப் போனப்போ திருநீறு பூசிக்கிட்டிருக்கார் பெரியார்; அடிகளார் நம்பிக்கையைக் குலைக்கக் கூடாதுங்கிறதுக்காக! தனிப்பட்ட மத உணர்வுகளை மதிக்கிறது; வழிபாட்டு உரிமையில சம உரிமையை நிலைநாட்டுறது, மதவாத அரசியலை எதிர்த்து உறுதியா நிக்குறது… திமுகவோட இந்தப் பாதையில் மாற்றம் இருக்காது” என்று பதில் அளித்துள்ளார்.

இதுதான் பெரியார் பற்றாளர்களை  வருத்தமுற செய்துள்ளது.

“இந்து மதத்தில் நிலவிய பொருந்தா சடங்கு சம்பிரதாயங்கள் பலவற்றை எதிர்த்து அழித்தவர் தந்தை பெரியார். அவரைக் குறிப்பிட்டு, தனது தாய், மனைவி ஆகியோர் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டிருப்பதையும் இணைத்து மு.க. ஸ்டாலின் பேசியது சரிதானா” என்ற ஆதங்கம் பெரியார் பற்றார்களிடம் எழுந்துள்ளது.

கொளத்தூர் மணி

இந்த நிலையில்   திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.

அவர், “பெரியார் கொள்கைகளை ஏற்று இயக்கங்களில் இருப்பவர்களுக்கும் தேர்தல் அரசியலில் இருப்பவர்கலுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாம் வகையினர் முழுமையாக நூறு சதவிகிதம் பெரியார் கருத்தை ஒட்டி செயல்படுவது கடினம்.

 

 

மனைவி என்பதற்காக,  கணவன் தனது கருத்துக்களை அவள் மீது திணிக்க முடியாது என்பது சரியான வாதம்தான்.  அதே நேரம் நல்ல கருத்துக்களை மனைவியோ – கணவனோ தனது இணையருக்கு புகட்டுவது அவசியம். ஆனால் அதற்கான முயற்சியை ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

தவிர பெரியார் பாதை என்பது நாத்திகம் மட்டும் இல்லை. சாதி வேறுபாடு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன கருத்தியல்களை அகற்றுவது, பெண் சுதந்திரம்.. இப்படி நிறைய இருக்கின்றன. அவை பற்றிகூட மனைவி உட்பட அனைவரிடத்தலும் பிரச்சாரம் செய்யலாம். செய்வது அவசியம்.

பெரியார் – குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி அடிகளாரை சந்திக்க பெரியார் சென்றபோது நடந்ததைச் சொல்கிறேன். அங்கு அடிகளாருக்கு அடுத்தபடியாக கட்டளைத்தம்பிரான் என்று இருப்பார்கள். அந்த மடத்துக்கு வருபவர்களை திருநீறு பூசி வரவேற்படு அங்கு நிலவும் வழக்கம். அதன்படி பெரியாருக்கும் கட்டளைத்தம்பிரான் ஒருவர் திருநீறு பூசிவிட்டார். அவை நாகரீகம் கருதி பெரியார் அதைத் தடுக்கவில்லை. அதேந நேரம், “களைப்பாக இருக்கிறது. முகம் கழுவ வேண்டும்” என்று சொல்லி முகம் கழுவி திருநீறை அழித்துவிட்டார். இதுதான் நடந்தது.

அந்த ஒரு நிகழ்வையும் காலம் முழுதும் திருநீறு குங்குமம் வைத்து சாஸ்திர சடங்குகளை நம்புபவர்களையும் ஒப்பிடுவது சரியல்ல” என்றார் கொளத்தூர் மணி.

கோவை ராமகிருட்டிணன்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான கோவை.ராமகிருட்டிணனையும் தொடர்பு கொண்டு ஸ்டாலின் பேச்சு குறித்து கேட்டோம்.

அவர் நம்மிடம் தெரிவித்ததாவது:

“ஆனால் ஸ்டாலின் புரியாமலோ, வேண்டுமென்றோ இப்படிப் பேசியிருப்பதாக நான் கருதவில்லை. ஆனாலும் விளக்க வேண்டியது நமது கடமை.

திருமணம் நடந்துவிட்டது என்பதாலேயே  மனைவியானவள் தனது விருப்பத்தை, உரிமையை விட்டுக்கொடுத்து  கணவனது கருத்துக்களை ஏற்க  வேண்டும் என்பதில்லை என்று மு.க. ஸ்டாலின் சொல்கிறார். அது மிகச் சரிதான்.

நாகம்மையார்

அதே நேரம் நாம்  ஒரு விசயத்தை அறிந்துகொள்ள வேண்டும்.  பெரியரைப் பொறுத்தவரை நாகம்மையார் இதே நிலையில்தான் இருந்தார். திருமணம் முடித்து வந்த அவர் மிகுந்த கடவுள் பக்தி மிக்கவாராக இருந்தார்.  அவருக்கு பெரியார், பகுத்தறிவு கொள்கைகளை புகட்டினார். மெல்ல மெல்ல அக்கொள்கைகளை புரிந்து ஏற்றுக்கொண்ட நாகம்மையார், முழுமையான பகுத்தறிவுவாதி ஆனார்.  இயக்க போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தவும், சிறை செல்லவும் செய்தார். தனது இறுதிக்காலம் வரை இயக்க கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தார். இயக்கமாகவே மாறினார்.

இது ஒவ்வொருவரது கடமை.

அதாவது மனைவி உட்பட யாராக இருந்தாலும், அவரை கட்டாயப்படுத்தி கொள்கைகளைத் திணிக்கக் கூடாது. அதே நேரம் அவருக்கு நாம், நமது கொள்கைகளை விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்.

அதை  ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்.  இதைத்தான் பெரியார் செய்தார்.

இரண்டாவது விசயம்… வரலாற்று ரீதியாக.. பெரியார், அண்ணா என்று வரிசையாகச் சொல்லலாம்.  ஆனால் தேர்தல் அரசியலில் ஈடுபட அண்ணா திட்டமிட்டபோதே, அண்ணாவின் கொள்கைகள் வேறுபட ஆரம்பித்துவிட்டன என்பதை உணரவேண்டும். பெரியார் கொள்கைகளை, அப்படியே அண்ணா அல்லது தி.மு.க.விடம்  எதிர்பார்க்கக் கூடாது.

நாத்திகராக இருந்த பெரியார், இந்து மத சடங்கு சம்பிராதயங்களை எதிர்த்துப் போராடினார். அது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மத ரீதியிலான உரிமைகளும் வேண்டும் என்பதற்காகத்தான். மற்றபடி  கோயில் கட்ட வேண்டும், மத   பண்டிகைகள் கொண்டாட வேண்டும் என்பதற்காக அவர் போராடவில்லை. ஆகவே இந்து மத உரிமைகளுக்காக போராடினார் பெரியார் என்று தவறாக நினைக்கக் கூடாது. மக்களுக்கான சம உரிமைக்காகவே அவர் போராடினார். மற்றபடி அவர் என்றுமே கடவுள் நம்பிக்கைக்கு ஆட்படவில்லை.

அதையும் மு.க. ஸ்டாலின் தாய் மற்றும் மனைவி, கடவுள் நம்பிக்கையோடு சாஸ்திர சம்பிரதாயங்களில் பற்றோடு இருப்பதை ஒப்பிடக்கூடாது.

கருணாநிதி – பெரியார்

பெரியார் கூட்டிய கடைசி மாநாடு, சென்னையில் 1973ம் வருடம் நடந்தது.   அதில் கலந்துகொண்டு பேசிய கருணாநிதி, “தந்தை பெரியார் கடவுள் இல்லை என்று கூறவில்லை. ஒரே ஒரு கடவுளை வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் தெரிவிக்கிறார்” என்கிற அர்த்தத்தில்  பேசினார்.

அப்போது மேடையில் இருந்த பெரியார், உடனடியாக தலையை ஆட்டி, தான் அப்படிச் சொல்லவில்லை என்று  மறுத்தார்.

உடனே கீழே இருநத்தொண்டர்கள், “கடவுள் இல்லை, கடவுள் இல்லை” என்று பெரும் முழக்கமிட்டார்கள்.

உடனே கருணாநிதி, “தந்தை பெரியார் இல்லை என்று சொல்வதை நானும் மறுக்கவில்லை” என்பது போல பேசி சமாளித்தார்.

அந்த நிகழ்வுக்கு சாட்சியாக.. அன்று நிகழச்சியில் கலந்துகொண்ட சிலர் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள்.

ஆகவே கடவுள் நம்பிக்கைக் கொண்டிருப்பது அவரவர் விருப்பம். அதற்காக பெரியாரை  இழுப்பது தவறு” என்று சொல்லி முடித்தார் கோவை ராமகிருட்டிணன்.

பேட்டிகள்: டி.வி.எஸ். சோமு