மும்பை

காராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதா நிறைவேறி உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் ஆளுநரே வேந்தராகச் செயல்படுவது வழக்கமாகும். துணை வேந்தரை தேடுதல் குழுவின் பரிந்துரைப்படி நியமிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கே உண்டு. இன்று மகாராஷ்டிர அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இந்த மசோதாவில் ”மாநில அரசுக்குத் தேடுதல் குழு, துணை வேந்தர் பதவிக்காக 5 பேரின் பெயர்களை அனுப்ப வேண்டும், அதில் இருந்து இருவரை தேர்வு செய்து அரசு ஆளுநருக்கு அனுப்பும். அதில் ஒருவரை ஆளுநர் துணைவேந்தராக அடுத்த 30 நாட்களுக்குள் நியமிக்க வேண்டும் என உள்ளது.

மேலும் இணை வேந்தர் பதவி உருவாக்கப்பட்டு, உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என்றும் வேந்தருக்கு இணையான பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஆளுநரின் துணை வேந்தர் நியமன அதிகாரங்கள் குறைக்கப்பட உள்ளது

மேற்குவங்கத்தில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கி அந்த பொறுப்பை முதலமைச்சருக்கு வழங்கலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தது ஏற்கனவே சர்ச்சைக்குள்ளானது தெரிந்ததே.