தூத்துக்குடி துப்பாக்கி சூடு அன்று ஆட்சியர் எங்கே சென்றார்? அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய அன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளது.

மேலும், பொதுமக்கள் நடத்திய 99 நாட்கள் போராட்டம் குறித்து காவல்துறையினர் சேகரித்த தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கி சூட்டின்போது காவல் துறையினர் உபயோகப்படுத்திய துப்பாக்கி குறித்தும் விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான  போராட்டத்தின்போது, நடைபெற்ற வன்முறை, துப்பாக்கி சூடு சம்பந்தமாக பல வழக்குகள் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும்  இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளதாகவும், , பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலவச சட்ட உதவி, மேலும் சம்பவம் குறித்து தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதாடியபோது,  மே 20ஆம் தேதி மாவட்ட எஸ்.பி. தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவில்லை என்றும், போராட்டத்திற்கு பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஆஜரான அரசு வழக்கறிஞர், தூத்துக்குடியில் சமாதானக் கூட்டம் நடந்தபோது, சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றதாகவும், எவ்வித வன்முறையிலும் ஈடுபட மாட்டோம் என அப்போது பொதுமக்கள் உறுதி அளித்ததாகவும் வாதிட்டார்.

ஆனால், மே 22ம் தேதி மக்கள் நடத்திய  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்கியதுடன், பொதுச்சொத்துகளையும் சேதப்படுத்தியதாக வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தூத்துக்குடியில் மிகப்பெரிய போராட்டம் நடந்தபோது மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார் என கேள்வி எழுப்பினர்.

மேலும், மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டின்போது, அவர்கள்   என்னென்ன வகை துப்பாக்கிகளை பயன்படுத்தினர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாட்கள் மக்கள் நடத்திய போராட்டம் குறித்த வீடியோ பதிவை தாக்க செய்ய வேண்டும்,  99 நாட்கள் அமைதிப் போராட்டம் நடந்தபோது, உளவுப்பிரிவு போலீசார் சேகரித்த தினசரி தகவல்களையும் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கின்  விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags: Madurai hc questioned, where did go the collector while tuticorin gunfire?, தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தலைமை செயலகத்தில் பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்