இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

இதனைத் தொடர்ந்து அந்த பதவியில் இதுவரை யாரும் நியமிக்கப் படாமல் இருந்தது.

லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹான்

இந்த பதவிக்கு ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

1981 ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11 கூர்க்கா ரைபிள் படைப்பிரிவில் பணியில் சேர்ந்த அனில் சவுஹான் 40 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வீரதீர செயல்களை புரிந்த அனில் சவுஹானுக்கு பரம் விஷிஷ்ட் சேவா உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.

2021 ம் ஆண்டு மே மாதம் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அனில் சவுஹான் தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புத்துறை அமைச்சக செயலாளராகவும் செயலாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.