டெல்லி:  ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் அமளியால் 4வது நாளாக  நாடாளுமன்ற அவைகள் முடங்கி உள்ளன. மக்களின் அக்கறை காட்டாக எம்.பி.க்களால், மக்களின் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு, கடந்த 13ம் தேதி தொங்கிய நிலையில், தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று 4வது நாளாகவும் இரு அவைகளும் முடங்கி உள்ளன.

இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். அதே வேளையில் அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணி ஆற்ற வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது ஆதரவாளர்களுக்காக நாடாளுமன்றத்தை முடக்கி, கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஷிரோமணி அகாலிதளம் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல், நாடாளுமன்றத்தை சீர்குலைக்காமல் செயல்படக் கோரி, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் (Save democracy) பதாதையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டுத் தலைவர்களிடம் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்  பிரதிநிதிகள். ஆனால் அவர்களின்  சமீபகால செயல்கள், மக்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  இதுபோன்ற இடையூறு காரணமாக, கோடிக்கணக்கான மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பான விவாதப் பொருளாக உள்ளன. இந்தியப் பொது மக்கள் உழைத்துச் சம்பாதித்த பணம் ஏன் அரசியல்வாதிகளின் சலசலப்பால் வீணடிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.