சென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்! ஆனால்…

சென்னையில் மாற்றுத்திறனாளியான சிறுமி ஏழு மாதங்களாக 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்த விவகாரம் வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைதளங்களில் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களுக்காக வாதாடமாட்டோம் என்று வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.

ஆனால், தற்போது சென்னை சிறுமிக்கு நடந்த கொடுமை போலவே மேலும் பலருக்கு கொடுமை நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக எவரும் வரவில்லை என்று ஆதங்கப்படுகிறார் மனித உரிமை செயற்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் இருந்து…

“கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது இந்தியாவே கொந்தளித்தது. சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பெண்கள் மீதான வன்முறை நடந்த பிறகு 2 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதத்தில் தீர்ப்பளிக்க வேண்டும் என்றெல்லாம் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. நடவடிக்கை எடுக்க தவறுகிற மருத்துவர்கள் மீதும் காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் என்கிற முடிவு வரவேற்கக்கூடியதுதான். ஆனால் நாம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு எத்தனை பேருக்கு வழக்கறிஞர் சங்கம் இணைந்து நீதி வாங்கிக் கொடுத்திருக்கிறது. வாதாடமாட்டோம் என்பது ஒரு உணர்ச்சி ரீதியான முடிவு. ஆனால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக எங்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து வழக்கினை நடத்துவோம் என்று முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் நாட்டில் ஏழை எளிய பல குழந்தைகள் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வழக்கு நடத்துவதற்கு வசதியில்லாமல் துயரப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் சென்று இந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உறுதுணையாக இருந்திருந்தால் இதுபோன்ற வன்முறை நடந்திருக்காது. கோபத்தைவிட செயல் தான் தேவைப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு சிவகங்கையை சேர்ந்த 14 வயது சிறுமியை காவல்துறை அதிகாரிகள் உட்பட 13 பேர் ஒரு வருடமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வன்முறையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் குழந்தையின் குடும்பத்தினரை மிரட்டி வங்கியில் ரூ.6 இலட்சம் பணம் போட்டு வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டனர். இதில் கொடுமை என்னவென்றால் அந்த இன்ஸ்பெக்டர் மறுபடியும் பணியில் இருக்கிறார்.

காரைக்குடியைச் சேர்ந்த 14 மற்றும் 13 வயது கொண்ட இரண்டு சிறுமிகள் கடந்த வருடம் 6 மாத காலம் அடைத்து வைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்” – இவ்வாறு ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார் எவிடன்ஸ் கதிர்.

இன்று சென்னை சிறுமிக்காக கொதிப்பவர்கள் எவிடன்ஸ் கதிரின் பதிவை அவசியம் படிக்க வேண்டும்.

 

 

Tags: Like chennai girl 3 more were raped! But..., சென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்! ஆனால்...