சென்னை:  காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது என எல்ஐசி விளக்கம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் கடும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து,  அதானி விவகாரத்தில் நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் எல்ஐசி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. . அதன்படி, வெவ்வேறு காலகட்டங்களில் அதானி குழும நிறுவனங்களில் மொத்தமாக தாங்கள் செய்துள்ள முதலீடு ரூ.36,474 கோடி ஆகும். ஜனவரி 27, 2023  நிலவரப்படி அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.56,142 கோடியாக இருந்தது.

எல்ஐசி நிர்வகிக்கும் சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் உரிய தர மதிப்பீடுகள் கொண்டதாகும். காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அதானியில் முதலீடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரவி வருவதால் முதலீடுகள் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்வதாக எல்ஐசி விளக்கம் அளித்திருக்கிறது.