மதுரை:

2006ம் ஆண்டு மார்ச் 29ம் தேதியை காலண்டரில் இருந்து நீக்க வேண்டும். இந்த நாளில் தான் மதுரை ஐகோர்ட்டில் ஒரு தனி நீதிபதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நாள். இதன் மூலம் எனது வக்கீல் தொழிலில் கறுப்பு பேட்ஜ் அணியப்பட்டுவிட்டது என்று வக்கீல் சாஜி செல்லன் தெரிவித்துள்ளார்.

ஆம்.. மதுரை ஐகோர்ட் கிளையில் முதன்முதலாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில் ஆஜரான வக்கீல் கூறிய தகவல் தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியான விபரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியன்கூட்டம் இடத்தில் ரேக்லா ரேஸ் நடந்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தேன். அப்போது ஐகோர்ட் நீதிபதியாக இருந்த பானுமதி (தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி) தாமாக இந்த வழக்கை விரிவுபடுத்தி ரேக்லா ரேஸ், காளை பந்தயம், ஜல்லிக்கட்டு ஆகியவற்றுக்கு தடை விதித்தார்.

கரிசகுளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் முனியசாமி தேவர் என்பவருக்காக இந்த வழக்கில் ஆஜரானேன். பிற நீதிபதிகள் ரேக்லா ரேசுக்கு சில மாவட்டங்களில் நடத்த அனுமதி வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டி எனது வாதத்தை ஆரம்பித்தேன். ஆனால், வழக்கின் போக்கை திசை திருப்பி, விலங்குகளை துன்புறுத்த எப்படி அனுமதிக்கலாம் என்ற ரீதியில் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
யாருக்கும் நோட்டீஸ் கூட வழங்காமல், மனு விசாரணைக்கு ஏற்ற அன்றே உணவு இடைவேளைக்கு பிறகு உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் பிள்ளையார்நத்தத்தில் ரேக்லா ரேஸ் நடத்த ஐகோர்ட் தனி நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா (உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர்) அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்த நீதிபதி பானுமதி எழுதிய தீர்ப்பில்,‘‘ தற்போதைய சூழ்நிலைக்கு இந்த தீர்ப்பு ஒத்துவராது. தற்போதைய சூழலுக்கு ஏற்ற நிலையை தான் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். விலங்குகளை துன்புறுத்துவதில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் 1996ம் ஆண்டிலேயே மும்பை ஐகோர்ட் காளைச் சண்டைக்கு தடை விதித்தருந்ததை சுட்டிக்காட்டி அரசு வக்கீல் விஸ்வநாதன் தாக்கல் செய்திருந்ததையும் நீதிபதி பானுமதி குறிப்பிட்டார். ரேக்லா ரேஸ், ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்தார். பாரம்பரியம், கலாச்சாரம், மத அடிப்படையிலான விளையாட்டு போட்டி என்ற எனது வாதத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார் வக்கீல் சாஜி செல்லன்.

ஜல்லிக்கட்டு என்பது பொழுது போக்கு விளையாட்டோ, வீர விளையாட்டோ கிடையாது. இது விலங்கு உரிமை மீறல். விலங்குகளை ஆத்திரமூட்டும் செயல் இது என்பது நீதிபதியின் கருத்தாக உள்ளது. ‘‘ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு இல்லை என்றால், உலகில் எந்த இடத்தில் வெறுங்கையுடன் காளையை அடக்கும் விளையாட்டு நடக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றும் கருத்தும் நிலவுகிறது.