பீகார்: பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், 31 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றனர். இதில் காங்கிரஸ் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். லாலுவின் மற்றொரு மகனுக்கும் பதவி கிடைத்துள்ளது.

பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்த முதல்வர் நிதிஷ்குமார், மகாபந்தன் கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். ஏற்கனவே முதல்வராக நிதிஸ்குமாரும், துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்ற நிலையில், இன்று  31 பேர்  புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று பதவி ஏற்றுள்ள அமைச்சர்களில்,  ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் 16 பேரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 11 பேரும், காங்கிரஸ் சார்பில் 2, ஜித்தன்ராம் மஞ்சி கட்சி மற்றும் சுயேச்சை சார்பில் தலா ஒருவர் பதவியேற்று கொண்டனர். லாலுவின் ஒரு மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ள நிலையில், அவரது மற்றொரு மகன் தேஜ் பிரதாப் யாதவும் இன்று அமைச்சராக பதவியேற்றார்.

மேலும், ஐக்கிய ஜனதா தளத்தின் அலோக் மேதா, சுரேந்திர பிரசாதய யாதவ், ராமனந்த் யாதவ், குமார் சர்வஜீத், சமீர் குமார் மகாசேத் மற்றும் லலித் யாதவ் உள்ளிட்ட 16 பேர் பதவியேற்று கொண்டனர்.  ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த அசோக் சவுத்ரி லேஷி சிங், விஜய் குமார் சவுத்ரி, சஞ்சய் ஜா, ஷீலா குமாரி, சுனில் குமார் மதன் சஹ்னி மற்றும் பிஜேந்திர யாதவ் உள்ளிட்ட 11 பேர் பதவியேற்றனர்.

காங்கிரசின் அபிக் ஆலம், முராரி லால் கவுதம், மஞ்சி கட்சியின் சந்தோஷ்சுமன் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமாரும் பதவியேற்று கொண்டனர்.