குற்றாலநாதர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது.

கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் இத்தலத்தில் திருமாலை, சிவனாக்கி வழிபட்ட வரலாறு கூறப்பட்டுள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெற்ற போது, அங்கு கூடியிந்தவர்களின் பாரம் தாங்காமல் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயரத் தொடங்கியது. பூமியின் நிலையை சரிப்படுத்த சிவபெருமான் அகத்தியரை தென்திசையிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்புகிறார். அகத்தியருக்கு அங்கு தனது திருமணக் கோலத்தைக் காட்டுவதாகவும் வாக்களிக்கிறார். அகத்தியரும் பொதிகை மலை வந்து அருவியில் நீராடிவிட்டு அருகிலுள்ள கோவிலுக்குச் சென்றார். ஆனால் அக்கோவில் ஒரு வைணவக் கோவில். அகத்தியர் வைணவர் இல்லை என்று கோவிலுக்குள் செல்ல தடை விதித்தனர். மிகுந்த கவலையுடன் அருகிலுள்ள இலஞ்சி சென்று அங்குள்ள முருகரை வழிபட்டார். முருகப் பெருமான் அகத்தியரை வைணவர் வேடத்தில் கோவிலுக்குள் செல்லும் படியும், உள்ளே சிவனின் திருமணக் கோலத்தைக் காணலாம் என்றும் கூறினார்.

கோவிலுக்குள் அவ்வாறே சென்ற அகத்தியர் விஷ்ணு சிலாவுருவில் கருவறையில் இருப்பதைக் கண்டார். கண்களை மூடிக்கொண்டு சிவனை பிரார்த்தனை செய்தவாறு அச்சிலையின் தலையில் தனது கையை வைத்து அழுத்த, விஷ்ணுவின் சிலை குறுகி ஒரு சிவலிங்கமாக மாறியது. அகத்தியருக்கு சிவ-பார்வதி திருமணக் காட்சியும் கிடைத்தது. அகத்தியரால் சிவத் திருமேனியாக மாற்றப்பட்டதால் லிங்கத் திருமேனியின் மீது அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்த அடையாளம் இருப்பதைக் காணலாம். விஷ்ணுவின் சிலாரூபம் லிங்கமாக மாறியதைப் போல ஸ்ரீதேவியை குழல்வாய் மொழியம்மை ஆகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றியதாகவும் ஐதீகம்.

குற்றாலநாதர் கோவில் மலைகள் சூழ்ந்த இயற்கையழகு வாய்ந்த சூழலில் சுமார் 5000 அடி உயரம் கொண்ட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைத்தொடர் திரிகூடமலை என்றழைக்கப்படுகிறது. ஆலயம் சுமார் 3.5 ஏக்கர் நிலபரப்பளவில் நான்கு வாயில்களோடு சங்கு வடிவத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோவில் சங்கின் வடிவில் இருப்பதை திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி கோவிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து காணலாம்.

இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் வடவருவியும், தேனருவி என்ற சிவமதுகங்கையும் சிறப்புடையவை. வடவருவியில் மூழ்கினாரது பாவம் கழுநீராகப் பிரிந்து ஓடும் என்பது இத்தல ஐதீகம். இத்தலத்தின் தலவிருட்சமாக பலாமரம் (குறும்பலா) உள்ளது. இந்த பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், லிங்கத்தின் வடிவில் இருப்பது பார்த்து பரவசப்பட வேண்டிய ஒன்றாகும்.

கு என்றால் பிறவிப்பிணி. தாலம் என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா. ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, தை மகத்தில் தெப்போற்ஸவம், பங்குனி உத்திரம். ஆடி அமாவாசையன்று கோவில் முழுதும் 1008 தீபம் ஏற்றும், பத்ரதீப விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.