கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதியன்று ராணுவ வீரர் பிரபு அந்த பகுதி திமுக கவுன்சிலர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், வதந்திகளை பரப்புவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதியன்று ராணுவ வீரர் பிரபு என்பவர், தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி உட்பட ஒன்பது பேர் கொண்ட கும்பலால் தாக்குதலுக்குள்ளானார். இந்த நிலையில், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

“திமுக-வினர் அராஜகத்தால் ராணுவ வீரர்களுக்குச் சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை” என மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த டிவிட்டில்,  “கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, தி.மு.க பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். ராணுவ வீரர்களுக்கு, தி.மு.க-வினர் அராஜகத்தால் சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை.

தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் வீரர்களை, அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியிருக்கின்றன.

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கு எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உடனடியாகக் கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணகிரி எஸ்பி  சரோஜ் குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் உறவினர்கள்.  இதனை  இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு இணைத்து சில கட்சிகள் வதந்திகளைப் பரப்புகின்றன. அவ்வாறு சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.