Kings XI Punjab beat Gujarat Lions by 26 runs

ஐபிஎல் 10 வது சீசன் போட்டியில், ஹசிம் அம்லா, அக்‌ஷர் படேலின் அபார ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 26 ரன் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தியது.

ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசியது. நது சிங் பந்தில் பஞ்சாப்பின் துவக்க வீரர் வோரா (2) வந்த வேகத்தில் வெளியேறினார். ஆனாலும், ஹசிம் அம்லா, ஷேன் மார்ஷ் ஜோடி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

இந்த ஜோடி 70 ரன் சேர்த்த நிலையில், நிதானமாக ஆடிய மார்ஷ் (30) டை பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய அம்லா அரைசதம் அடித்தார். இவர் 40 பந்தில் 65 ரன் சேர்த்து அகர்வால் பந்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் மேக்ஸ்வெல், 3 சிக்சர்களை பறக்க விட்டு, 18 பந்தில் 31 ரன் எடுத்து வெளியேறினார். கடைசி கட்டத்தில், அக்‌ஷர் படேல் அதிரடியாக ஆடி 17 பந்தில் 34 ரன் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன் சேர்த்தது. குஜராத் தரப்பில் டை 2, அகர்வால், நது சிங், ஜடேஜா, ஸ்மித் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய குஜராத் அணி பேட்டிங்கிலும் சொதப்பியது.  துவக்க ஆட்டக்காரர்கள் மெக்கல்லம் (6), பிஞ்ச் (13) நல்ல தொடக்கத்தை தரத் தவறினர். கேப்டன் ரெய்னா (32) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். தினேஷ்கார்த்திக் மட்டும் அரைசதம் அடித்து வெற்றிக்காக போராடினார். ஆனால் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தியதால், குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. தினேஷ் கார்த்திக் 58 ரன் (44 பந்து), பசில் தாம்பி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அக்‌ஷர் படேல், கரியப்பா, சந்தீப் ஷர்மா தலா 2 விக்கெட், மோகித் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். பஞ்சாப்பின் அம்லா ஆட்டநாயகன் விருது வென்றார்.