கே.ஜி.எப். முதல் பாகத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது.
கருடாவை கொன்று கேஜிஎஃப்பை ராஜ கிருஷ்ணப்பா பைர்யா எனும் ராக்கி பாய் கைப்பற்றி தனது ஆட்சியை தொடங்குவதோடு, முதல் பாகம் நிறைவடைந்தது.
முதல் பாகத்திலேயே ராக்கிக்கு எதிராக அதீரா மற்றும் பிரதமர் ராமிகா சென் கதாபாத்திரங்களை கோடிட்டு காண்பித்து இருந்தனர்.
அவர்களுடனான ராக்கியின் போராட்டம் என்ன ஆனது என்பதுதான் இந்த இரண்டாம் பாகம்.
இது(வும்) எப்படி இருக்கிறது என்பதற்கு, ராக்கியின் ஒரு வசனமே உதாரணம்:
“வயலென்ஸ் எனக்கு பிடிக்காது; ஆனால், வயலன்ஸுக்கு என்னை பிடிக்கிறது!”
நாயகன் யாஷ் அசரடிக்கிறார். முதல் பாகத்தில் கடுமையாக உழைத்து விட்டோம். இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக நடிப்போம் என இல்லாமல் இதிலும் தனது முழு உழைப்பை கொட்டியிருக்கிறார்.
முதல் பாகத்தில், வில்லன் கருடா தாமதமாகத்தான் அறிமுகப்படுத்தப் படுவார். ஆரம்பத்தில் இருந்து ராக்கி பாயின் கதாபாத்திரம்தான் பில்ட் அப் செய்யப்படும்.
இரண்டாம் பாகத்தில் கருடா இறந்த செய்தி அறிந்ததுமே மீண்டும் கேஜிஎஃப்பை அடைய வேண்டும் என்றும் ராக்கி பாயை துவம்சம் செய்ய வேண்டும் என்றும் அதீரா வரும் காட்சிகள் வந்துவிடுகின்றன. அதீராவாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மிரட்டியிருக்கிறார்.
இந்தியாவின் தங்க சுரங்கத்தை ஒரு குறிப்பிட்ட தாதா கூட்டம் கட்டுப்பாட்டில் வைத்து, உலகளவில் கடத்தல் தொழில் நடத்துவதை ஒடுக்க தீவிரமாக களம் இறங்கும் பிரதமர் ராமிகா சென்னாக பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் அற்புதமாக நடித்திருக்கிறார்.
படம் முழுதுமே பிரம்மாண்டம், மிரட்டல்தான். ஆனால் முதல் பாகத்தை பார்க்காத ரசிகர்களுக்கு கதை தெளிவாக புரியாது.
ஹீரோயின் ஸ்ரீனிதி ஷெட்டி முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வந்து போகிறார். அவ்வளவே.
திரையரங்கில் பார்த்து பிரமிக்க வேண்டிய படம், கேஜிஎப் 2!