கேரளா கோவிலில் முதியோர் இல்லம்!! நெஞ்சை உருக்கும் தகவல்கள்

Must read

கொல்லம்:

80 வயது முதியவர் ராமன். முற்றிலும் செயலிழந்த இவரை அவரது மனைவியும், 3 பிள்ளைகளும் வீட்டை விட்டு விரட்டிவிட்டுவிட்டனர். எனினும் போலீசார் உதவியுடன் வீட்டினுள் நுழைய முயற்சி மேற்கொண்டும் பலனில்லை. வீட்டில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது.

இதையடுத்து அவர் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஓச்சிரா பரபிரம்மா கோவிலில் தஞ்சமைடந்தார். ‘‘வீட்டில் நான் தொடர்ந்து இருந்தால் மரணத்தை தான் சந்திக்க நேரிடும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராமனை போல் அங்கு 374 மூத்த ஆண் மற்றும் பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கேரளா மட்டுமின்றி இதர மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கியுள்ளனர்.

374 பேரில் மிகவும் வயதான மற்றும் நோய் பாதிப்புற்ற ஆண் மற்றும் பெண்கள் 30 பேர் தங்குவதற்கு சிறப்பு ஓய்விடம் அமைக்கப்ப்டடுள்ளது. இதர நபர்கள் கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கியுள்ளனர். அவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தை பயன்படுத்திக் கொள்ளவும், குளிப்பதற்கு கோவில் குளத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

82 வயதாகும் வயாநத் பகுதியை சேர்ந்த தகரக்ஷான் என்பவர் கூறுகையில், ‘‘ தினமும் காலை அரிசி கஞ்சி, டீ வழங்கப்படுகிறது. மேலும், ஒரு கப் டீ மற்றும் இரவு உணவும் மாலை நேரத்தில் வழங்கப்படுகிறது. தங்களது மகள்களுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் தகரக்ஷானை போல் ராமனும் இங்கே தங்க முடிவு செய்தார்.

தகரக்ஜான் கூறுகையில், ‘‘நான் ஒரு ஆஸ்துமா நோயாளி. அதோடு காலிலும் வலி உள்ளது. சர்க்கரை நோயும் உள்ளது. நான் என்ன செய்ய முடியும். எனது மனைவி ஒரு ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். நான் எனது மகள்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை’’ என்றார்.

இந்த கோவிலில் தனது கணவர் மைக்கேலுடன் வாழும் சரஸ்வதி என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறார். அவர் கூறுகையில், ‘‘ எனது மகள்கள் மற்றும் குடும்பத்தினரால் கூடுதலாக எங்கள் 2 பேரை பராமரிக்க இயலவில்லை. எனக்கு 5 மகள்கள். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களது வருமானத்தில் எங்களை பார்த்துக் கொள்ள யாரும் தயாராக இல்லை’’ என்றார்

பாஸ்கரன் என்ற 85 வயது முதியவர் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தங்கியுள்ளார். கொல்லம் குண்டரா பகுதியை சேர்ந்தவர் இவர். பாஸ்கரன் கூறுகையில், ‘‘ எனது மனைவி இளைய மகனுடன் தங்கியிருக்கிறார். அவர் பெயரில் இருந்த சொத்துக்களை அவர்களுக்கு கொடுத்துவிட்டார். நான் அங்கு தங்குவது எனது மருமகளுக்கு பிடிக்கவில்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை.

எனக்கு 3 மகன்கள். என்னை பார்த்துக் கொள்வதில் எனது மகன்களுக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனால் அது அவர்களது மனைவிகளுக்கு பிடிக்கவில்லை. எனது இளைய மகள் வீட்டில் இருக்கும் மனைவியின் நிலமையும் சரியில்லை’’ என்றார்.

76 வயதாகும் ராஜன் என்பவர் தனது வாழ்நாளில் பாதி காலம் இங்கு தங்கியுள்ளார். சிறு வயதில் இருக்கும் போதே அவர் தனது பெற்றோரை இழந்துவிட்டார். கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு இரு சகோதரர்களும் இறந்துவிட்டனர். இதனால் ஆதரவில்லாமல் ராஜன் இந்த கோவிலுக்கு வந்தார்.

இதேபோல் வாலி என்ற 72 வயது மூதாட்டியும் 34 வயதில் தனது கணவர் விவகாரத்து செய்தது முதல் இங்கே தங்கியுள்ளார். என்னை போன்றவர்கள் எங்கே செல்வார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கோவிலில் தங்கியுள்ள பலர் தங்களது ஏழ்மையின் காரணமாக வந்து தஞ்சமடைந்துள்ளனர்.

பலர் சொத்துக்கள் இல்லாமலும், இருந்த சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டும இங்கு வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு ரேசன் கார்டு போன்ற அடிப்படை ஆவணம் கூட இல்லை.
வயதான காலத்தில் ஆதரவு தேவைப்படும் இவர்களுக்கு ஒச்சிரா பரபிரம்மா கோவில் தான் அனைத்தையும் வழங்கி வருகிறது.

இந்த கோவில் நிர்வாக குழுவினர் இங்கு தங்கியிருப்பவர்களுக்கு இரு வேளை இலவச உணவும், வெளியில் இருந்து தினமும் வருபவர்களுக்கு ஒரு வேலை உணவு வழங்குகிறது. மேலும், கோவில் பக்தர்களும் இலவசமாக தினமும் மதிய உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்களின் உடல் நலத்திற்கு தேவையான சிகிச்சையும் கோவில் அருகே உள்ள பரபிரம்மா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. கோவில் நிர்வாக குழு, பக்தர்கள் இவர்களின் தேவைக்கு ஏற்ப ஆடைகளையும் வழங்குகின்றனர்.

இவர்களுக்கான வீட்டு வசதியை விரிவுபடுத்தும் திட்டத்தையும் கோவில் நிர்வாகம் கொண்டுள்ளது. ‘‘இந்த கோவில் வளாகத்தில் ஆதரவற்றோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவில் வளாகத்தில் தங்கியுள்ளவர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கும் நோக்கத்தோடு புதிய கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று கோவில் செயலாளர் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

இங்கு இறப்பவர்களுக்காக பிரத்யேக இடுகாடு ஒன்று அமைக்கவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது இறப்பவர்கள் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் புதைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article