கோழிக்கோடு: கேரளா விமான விபத்தில் விமானி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின்  ஒரு பகுதியாக இயக்கப்படுகிறது. 191 பயணிகளுடன் வந்த விமானம் கோழிக்கோடு காரிப்பூர் சர்வதேச விமானத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்க தொடங்கியது.

விமானம் 35 அடியில் இறங்கும்போது 2 துண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி தீபக் வசந்த் பலியானார். அவருடன் பயணிகள் ராஜூவன், சபுதின் குன்னமங்கல்ம் ஆகிய 2 பேரும் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்து உள்ள பலரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விமானத்தில் தீ பிடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நிகழ்ந்த விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டது. பயணிகள் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள கட்டுப்பாட்டு அறையை 04832719493 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்து குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது: காரிபூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மீட்பு மற்றும் மருத்துவ உதவிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.