டெல்லி: டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் கேசிஆர் எனப்படும் சந்திரசேகரராவின் மகள் கவிதா அமலாக்கத்துறைக்கு இன்று ஆஜாராகாமல் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்சநீதிமன்றம் அவரது வழக்கை அவசர வழக்காக விசாரித்த மறுத்து விட்டது. இதனால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி  அரசின் மதுபான கொள்கை முறைகேடு புகார் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு 100 கோடி ரூபாய் வழங்கிய குற்றச்சாட்டு  கூறப்படுகிறது. இந்த   முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உங்ளள நிலையில், டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியது. ஆனால், கவிதா அன்று ஆஜாகாமல், பெண்கள் இடஒதுக்கீடு போராட்டம் என கூறி டெல்லியில் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, மார்ச் 11ந்தேதி அன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 8மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில்,  மீண்டும் இன்று (16ந்தேதி) ஆஜராக அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியது.

ஆனால், இன்றைய விசாரணைக்கு ஆஜராகாத கவிதா, வேறொரு தேதியில் ஆஜராக அமலாக்கத்துறையிடம் கவிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,  அமலாக்கத்துறை விசாரணை சம்மனுக்கு தடைகோரி கவிதா உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம், அவரது வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பெண்களை அழைத்து விசாரிக்கக்கூடாது எனவும், சட்டத்தின்படி, வீட்டில் வைத்தே விசாரிக்க வேண்டுமெனவும் கவிதா தரப்பு வழக்கறிஞர் அப்போது வாதிட்டார். ஆனால், அதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், கவிதா கைது செய்யப்படுவாரா அல்லது அவருக்கு அவகாசம் வழங்கப்படுமா என்பது விரைவில் தெரிய வரும்.