அத்தியாயம்: 23      கடிதம் வரைந்தாள் மாதவி.

‘அன்புடையவர்க்கு,

முதலில் உங்களை வணங்கிக் கொள்கிறேன்.  என்மீது ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்.  பெற்றவர்களுக்கு பணி செய்யாமல் கண்ணகியோடு இரவோடு இரவாக ஊரைவிட்டுச் செல்லும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்பதை அறிய முடியாத அளவுக்குக் குழம்பிப் போய் இருக்கிறேன். இப்படி நடதுவிட்டமைக்காக வருத்தப்படுகிறேன்.  துன்பத்தில் வாழும் என் நெஞ்சு தங்கள் குற்றமற்ற அன்பை வேண்டுகிறது.  அறிவில் சிறந்த உங்களை மறுபடியும் வணங்குகிறேன்.

கடிதத்தை முடித்த மாதவி..

“கோசிகா, இது வெறும் கடிதம் இல்லை.  என் உயிரை காப்பாற்றப் போகிற அருமருந்து.  நான் என் உயிர் கலந்து எழுதிய என் எதிர்காலம்.  இப்போதைக்கு இது என் உயிர்.  பத்திரம்” என்றாள்.  கடிதத்தை அவனிடம் ஒப்படைத்தாள்.

“என் கண்மணியைப் போல் பாதுகாப்பாக கோவலனிடம் கொண்டு சேர்ப்பேன் மாதவி..”

“விரைந்து வா கோசிகா.  முடிந்தால் அவரை கையோடு கூட்டி வா, அல்லது எப்போது வருவார் என்பதைக் கேட்டு வா..”

தலையாட்டி விட்டு அந்த அந்தணன் கடிதத்தோடு வெளியேறினான்.  அவன் பிரம்மச்சாரி.  மாதவியிடம் பிரியமுள்ளவன்.   கோவலனைப் பிரிந்ததால், காதல் நோய் தாக்கப்பட்டு உயிர்வாழ சிரமப்படுகிறாள் மாதவி’ என்பதை அறிந்து அவளை சொந்தமாக்கப் படையெடுத்தவர்களுள் நிஜமான வருத்தத்தோடு மாதவியைப் பார்க்க வந்த ஆண்மகன்.  அவன்தான் இப்போது மாதவிக்காக தூது போயிருக்கிறான்.

மாதவி காத்திருந்தாள்.

அவள் கண்கள் இரண்டும் வாசலிலேயே பூத்து கிடந்தன.  மகள் கோவலனுக்காக காத்திருப்பதும், உருகிக் கண்ணீர் வடிப்பதும் சித்ராபதிக்குப் பிடிக்கவில்லை.

‘பெண்களின் கண்ணீர் விலைமதிப்பற்றது.  சரியான நேரத்தில் வடிக்கப்படும் ஒரு துளிக் கண்ணீர் உலகத்தையே புரட்டிப் போடும் வலிமை பெற்றது.  அத்தகைய கண்ணீரை அழுகிறேன் என்ற பெயரில் வீணாக்குவது அறியாமை  என்பது சித்ராபதியின் சித்தாந்தம்.

அழுகிற மகளை எரிச்சலுடன் பார்த்தாள்.

“எதற்கு நீ அழுகிறாய் மாதவி? கோவலனை பிரிந்து விட்டதற்காகவா? அடி பைத்தியமே.  அவனி டம் இருந்த செல்வம் அத்தனையும்தான் கறந்துவிட்டோமே.  இனி அவன் என்ன ஆனால் நமக்கென்ன?

மலரிடம் தேன் இருக்கும்வரைதான் வண்டு வரும்.  பெண்ணிடம் இளமை இருக்கும் வரைதான் ஆண்கள் விரும்புவார்கள்.  அழுதே உன் இளமையை அழித்துவிடாதே.  மன்னர் இன்று வீதி உலா வருகிறாராம்.  முடிந்தால் அவரை மடக்கிப் போடுகிற வழியைப் பார். அரண்மனை சுகம் அனுபவிக்கலாம்.  அழுவதை நிறுத்திவிட்டு போய் ஒப்பனை செய்து கொள்.”

“ஆமாம் மாதவி ” சித்ராபதிக்கு ஒத்துப் பாடினாள் கூனி.  இவள் சித்ராபதியின் உடன் பிறவா தோழி.

“இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?”

“எதற்கு வெட்கம்? ஆடல் மகளிர்க்கு இது நீதிதானே?”

“நீங்கள் இப்போது வெளியே போகிறீர்களா? நான் வீட்டை விட்டு என் பிள்ளையோடு போய் விடட்டுமா?”

சித்ராபதியும், கூனியும் மாதவியின் கோபத்தைக் கண்டு நடுங்கித்தான் போனார்கள்.  வெளியேறி னர் இருவரும்.

பொழுதெல்லாம் காதல் பேசி ஒரு  பிள்ளைக்குத் தாயாக்கி விட்டுப் போன கோவலனை சபித்து விட்டால் என்ன என்று மாதவிக்குத் தோன்றியது.  தமிழ் பண்பாடு அந்த அளவுக்கு விடவில்லை.  அழுவதற்கு மட்டும்தான் பண்பாடு அனுமதித்தது அழுதாள்.

இந்த அழுகைக்கு, கையிலிருக்கும் குழந்தைக்கு எல்லாம் காரணமான அந்த நாளை நினைத்துப் பார்த்தாள்.

அன்றுதான் மாதவியினுடைய நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

நாடே நாட்டிய மண்டபத்தின் முன் கூடி இருக்க, பொன்னால் செய்த மின்னல் கொடியென மாதவி மேடையில் தோன்றினாள்.

ஆடினாள். ஆடினாள் ஆடினாள்.

ஏழு வருடமாய் கற்ற வித்தையை பார்க்கின்ற கண்களுக்கு விருந்தாக்கி ஆடினாள்.  ஆடல் கலைக்கு அழகு கூட்டினாள்.

நாட்டியம் ஆடிய மாதவியின் விழிகள்  அங்கும் இங்கும் ஓடின.  அரசனைக் கண்டாள்.  அருகே அமர்ந்திருந்த அவன் மனைவியைப் பார்த்தாள்.  மந்திரியை கவனித்தாள்.  தளபதியை தாண்டிப் போனாள்.  முகத்தில் குமிழ்சிரிப்பு குடியிருக்க அமர்ந்திருக்கும் கோவலனை நோக்கினாள்.

காமத்தை கண்களில் பூசியிருந்தவர்கள் மத்தியில், கோவலன் மட்டும் காதலாய் பார்த்தான்.  மாதவி கதிகலங்கினாள்.  அதுவரை மாதவிக்கு உடம்பு மட்டும்தான் ஆடியது.  இப்போது மனசும் சேர்ந்து ஆடியது.

கோவலனும் மாதவியை கண்களால் விழுங்கினான்.  மாதவியைப் பார்த்த முதல் பார்வை யிலேயே அவன் மனசும் குதியாட்டம் போட ஆரம்பித்துவிட்டது.  மனைவி கண்ணகியா? அழகி மாதவியா? என்று அவனுக்குள் கேள்வி எழுந்தது.  மாதவி என்று விடை எழுதினான்.  இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

‘என்ன விஷயம்? ‘ மாதவியின் கண்கள் வினவின.

‘ஒன்றுமில்லை.  காதல்’

‘காதலா.. அடேயப்பா! நான் அதிர்ஷ்டசாலிதான்.  எத்தனை அழகானவன் எனக்குப் புருஷனாக வரப்போகிறான்.

மறுபடியும் கண்கள் சந்தித்துக் கொண்டன.

‘உங்கள் அந்தப்புரத்தின் ஆசை நாயகியாக்கும் உத்தேசத்தில் இந்த காதல் வந்திருந்தால் என்னை மறந்துவிடுங்கள் பதில் சொல்லத் தெரியாமல் அப்பா யார் என்று நான் கேட்டால் தலைகுனியும் என் அம்மாவைப்போல் என் பிள்ளை முன் தலைகுனிய நான் தயாராக இல்லை.  எனக்கு கணவராக .. என் பிள்ளைக்குத் தந்தையாக சம்மதம்தானே..?”

‘எனக்கென்று ஏது இனி தனி விருப்பம்? உன் விருப்பம்தான் என் விருப்பமும்.’

விழிவழியே காதல் அரங்கேறியது.

“சித்ரபதி, மாதவியின் கண்களைக் கவனித்தாயா? யாரோ ஓர் ஆண் மகனோடு காதல் பேசுகிறது.  மாதவியின் அழகை மூலதனமாக்கி இந்த உலகை விலைபேச விரும்பும் உன் ஆசையில் மண் விழுந்துவிடும் போலிருக்கிறதே..”

கூனி சொன்னாள்.

“நானும் கவனித்தேன்.  என்ன செய்யலாம்?”

“அதைத்தான் யோசிக்கிறேன்.”       நாட்டியம் முடிந்தது.

ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னும், முத்து மாலையும் பரிசளித்த மன்னன் ‘தலைக்கோலி’ என்ற பட்டத்தையும் மாதவிக்கு வழங்கிக் கௌரவித்தான்.

குடிமக்கள் ‘தலைக்கோலி மாதவி வாழ்க’ என்று கரகோஷம் போட்டனர்.  மாதவி நாட்டியத்துக்கு என்று பிறந்தவள் என்று மந்திரிகள் ஆராதித்தனர்.

அத்தனை களேபரத்தின் நடுவிலும், ‘என் நாட்டியம் எப்படி? அரசன் தந்த பட்டத்தைவிட உங்கள் பதில்தான் எனக்கு முக்கியம்?’ என்று கேட்டாள் விழிகளால்..

‘மிகவும் பிடித்தது’ என்பதாய் விழியசைத்து புன்னகைத்தான் கோவலன்.

“சித்ராபதி அங்கே பார்..”

“ஆமாம் நோய் முற்றி விட்டது.  இப்படியே விடுவது நல்லதல்ல.  யோசிக்கிறேன் என்றாயே.. யோசித்தாயா கூனி..”

“சொல்கிறேன் கேள்..”

கூனி சொன்ன யோசனை சித்ராபதிக்கும் நல்லதாய் படவே, உடனே செயலில் இறங்கினார்கள்.

அரசன் பரிசாய்த் தந்த முத்து மாலை விலைக்கு வீதிக்கு வந்தது.

“இந்த முத்துமாலை ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மதிப்புடை யது.  இதை வாங்குபவர் மாதவிக்கு மணமகனாக இருக்க லாம்” – செல்வச் செழிப்புள்ள இளைஞர்கள் அதிகம் உலவும் தெருவில் கூவித் திரிந்தாள் கூனி.

வீட்டில், எல்லா சமயக் கடவுளையும் வேண்டிக் கொண்டி ருந்தாள் மாதவி.  பொன்னாசை பிடித்து அலையும் அம்மா விற்பதற்கு அனுப்பியிருக்கும் முத்துமாலையை வாங்கி, அவரே என்னை ஆளும் உரிமையாளராக வேண்டும் என்று வேண்டினாள்.

அவள் வேண்டுதல் பலித்தது.

கோவலன் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து முத்துமாலையை வாங்கினான். கூனியோடு மாதவியின் இல்லம் நோக்கி நடந்தான்.  வலம்புரி முத்தே.  கரும்பே, தேனே என்று புகழ்ந்த மனைவி கண்ணகியை மறந்து, கூனி விற்பதற்குக் கொண்டுபோன முத்துமாலை கழுத்தில் புரள வரும் கோவலனைப் பார்த்த மாதவி மகிழ்ந்தாள்.  அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.  கடவுள் கைவிடவில்லை.  நன்றி இறைவா!

மெல்ல நடந்து கோவலன் அருகே வந்த மாதவி கண்மலத்திச் சொன்னாள்.  ‘நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  உங்களுக்கும் சந்தோஷம்தானே?’

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க கோவலனுக்குப் பொறுமையில்லை.  அங்கேயே மாதவியை அணைத்தான்.  மயங்கினாள்.  மாதவியின் ஒப்பனையைக் கலைத்துப் போட்டான்.

கலைந்துப்போன ஒப்பனையை  திருத்திக் கொண்டு மாதவி வருவாள்.  கோவலன் மறுபடியும் கலைத்துப் பாடுவான். இரவு பகல் மாறி மாறி வருவதுபோல் இந்த விளையாட்டு தொடர்ந்தது.

இந்த இன்பம் இனி என்றைக்கும் நிரந்தரம் என்றுதான் நினைத்தாள் மாதவி – இந்திர விழாவை காண பூம்பூகார் கடற்கரைக்குப் போவதற்கு முன்புவரை.

இந்திர விழாவுக்குச் செல்ல இஷ்டமில்லாமல்தான் கோவலன் இருந்தான்.  மாதவிதான் அவனை வற்புறுத்தி அழைத்துப் போனாள். விதி.

சென்றனர்.

புன்னகை மரநிழல், அதனடியில் புதுமணல் நிரவப்பட்டிருந்தது.  தாழை மலர் வாசம் நாசியை வருடியது.  ஓவியத் திரைச்சீலையை சுற்றிக் கட்டி நடுவில் வெண்ணிற தந்தக் கட்டிலிட்டு – மலர் தூவி அலங்கரித்து அழகு செய்தனர் மாதவியின் தோழியர்.

தோழி வசந்தமாலை சுமந்து வந்த யாழினை வாங்கி சுருதி கூட்டினாள்! கட்டிலில் தன் அருகில் இருந்த கோவலனிடம் கொடுத்து பாடச் சொல்லிப் பணித்தாள்.

“காவிரியே, சோழ மன்னன் கங்கைப் பெண்ணைக் கூடினாலும் நீ அவனை வெறுப்பதில்லை.  நீ வாழ்க” கோவலன் பாட்டு நீண்டது.

‘காவிரியே, சோழ மன்னன் குமரிப் பெண்ணைக் கூடினாலும் நீ அவனை வெறுப்பத்தில்லை. நீ வாழ்க.

‘ஏன், இவர் இப்படிப் பாடுகிறார்? மன்னர் ஒவ்வொரு பெண்ணோடும் கூடுவானாம்.  மனைவி  வெறுக்காமல் பாராட்டுகிறாளாம்.  இது எதற்கான முகாந்திரம்’  நான் வேறு பெண்களைத் தேடிப்போனால் நீ வெறுக்கக் கூடாது என்று சொல்லாமல் சொல்கிறாரா.. பிள்ளை மணிமேகலை பிறந்த பிறகு நான் அலுத்துப் போய்விட்டேனா?’

“என்ன யோசனை மாதவி? நான் பாடி முடித்து விட்டேன்.  இனி நீ பாடு.  நான் ரசிக்கிறேன். ” என்றான்.

‘சரி’ என்று தலையாட்டினாள்.  நீட்டிய யாழினைப் பெற்றுக் கொண்டாள்.  ஆனந்தமாக இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் அவள் மனசுக்குள் கோவலன் இடி இடித்தது.  கண் கலங்கியது.

“காவிரியே, இத்தனை மகிழ்ச்சியாய் அன்ன நடை நடந்து திரிவதற்குக் காரணம் உன் தலைவனின் நேர்மையே என்பதை நான் அறிந்தேன்.” என்ற பொருள்படி பாடினாள் மாதவி.  துளி கண்ணீர் யாழில் விழுந்து தெறித்தது.

“தலைவன் நேர்மையாக இருக்கவில்லை என்றால் தலைவி யும் நேர்மையாக இருக்கமாட்டாள்.  அப்படித்தானே? காவிரியிடம் , உன் தலைவன் நேர்மையானவன்.  அதனால் நீ சந்தோஷமாய் இருக்கிறாய் என்று பாடுகிறாய்.  இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா மாதவி? உன்னுடைய தலைவன் நான் நேர்மையானவன் இல்லை.  நீ சந்தோஷமாக இல்லை சரிதானே?”

“ஐயா! ஏன் இப்படி குதர்க்கமாய் பேசுகிறீர்கள்? நான் ‘சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.  நீங்கள்தான் என்னென்னமோ கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.”

“நான் பொய் சொல்கிறேனா?அப்படியானால், யாழில் பட்டுத் தெறித்த உன் கண்ணீருக்கு  என்ன அர்த்தம்?”

“என்ன நடந்துவிட்டதென்று இப்படிக் கோபம் வருகிறது?”

“தொடாதே.. இன்னும் என்ன நடக்க வேண்டும்? என்னிடம் உள்ள செல்வத்திற்காக என்னைக் காதலித்தவள் போல் நடித்தாய்.   இப்போது என்னையே பொய்யன் என்கிறாய்.  போதும் உன் பசப்பு.”

கட்டிலில் இருந்து எழுந்தான்.  “இன்றோடு நம் உறவு அறுந்து விட்டது என்று நினைத்துக் கொள். ” சொல்லிவிட்டு வெளியேறி நடந்தான்.

‘அந்த முத்துமாலையை, ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து வேறு எவனாவது வாங்கி யிருந்தால் அவனோடும் இப்படி காதல் பாட்டு பாடியிருப்பாய்.  அப்படித்தானே’ என்று கேட்டு அடிக்கடி  சொல் ஊசியால் குத்தி ஊடல் கொள்வானே.. அப்படி இதையும் ஊடல் என்றுதான் நினைத்தாள் மாதவி.

பாதி நாள் போன பிறகுதான் அவளுக்கு உறைத்தது.  உண்மையாகவே அவர் கோபித்துக் கொண்டு போய்விட்டாரா? சும்மா சீண்டிப் பார்க்கத்தானே அப்படிப் பாடினேன்? என்ன மனிதன் இவர்.. எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்பட்டுக் கொண்டு.

வசந்தமாலையை அனுப்பி கோவலனை அழைத்து வரச் சொன்னாள் அந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.  காதல் குழைத்து மாதவி எழுதி அனுப்பிய கடிதம் கோவலனால் வாசிக்கப்படாமலே திரும்பி வந்தது.

“அவர் என்னதான் சொன்னார் வசந்தமாலை?”

“நீ ஒரு நாடக மகளாம்.  நடிப்பது உனக்குக் கை வந்த கலையாம்.  இதுவரை நீ காட்டிய பாசமெல்லாம் வேஷமாம்.  இனியும் உன் நடிப்பை நம்பி ஏமாறத் தயாராக இல்லையாம்..”

“அப்படியா சொன்னார்?”

“உம்”

“இன்னும் கோபம் தனியவில்லை போலிருக்கிறது.  என் ஒப்பனையைக் கலைக்காமல் ஒரு நிமிடங்கூட அவரால் இருக்க முடியாதே.  பாரேன்.  இன்று மாலையே வரப் போகிறார்.  இல்லையென்றால் காலையில் கட்டாயம் வருவார்” என்றாள்.

கோவலன் வரவேயில்லை.

இப்பொழுதும் வரவில்லை.  கோசிகன் மட்டும்தான் வந்தான்.

“வா கோசிகா! கடிதத்தை அவரிடம்தானே கொடுத்தாய்.. படித்துப் பார்த்தாரா?  என்ன சொன்னார்? பதிலுக்கு கடிதம் ஏதும் தந்தாரா? எப்போது வருவாராம்?”

கோசிகன் நடந்ததை விவரித்தான்.

“கடிதத்தைக் கொடுத்தேன் மாதவி.  வாங்கிப் படித்தார்.

‘அந்தணா இந்த ஓலையின் பொருள் என் பெற்றோருக்கு நான் எழுதியது போலவே இருக்கிறது.  இதை என் பெற்றோரிடம் கொடுத்துவிடு’ என்று என்னிடமே கடிதத்தைத் தந்துவிட்டார்.

“என்னைப் பற்றி என்ன கேட்டார்?”

“எதுவும் கேட்கவில்லை”

“மணிமேகலையைப் பற்றி.”

“கேட்கவில்லை மாதவி.”

குற்றமே செய்திருந்தாலும் கோபம் என் மீதுதானே.  பிள்ளை என்ன பாவம் செய்தது? பிள்ளை முகத்தைப் பார்ப்பதற்காகவாவது வந்திருக்கலாமில்லையா? அப்பாவின் நெஞ்சில் உதைத்து விளையாட அவளுக்கு ஆசை இருக்காதா? துறவியா ஆசை துறந்து வாழ்வதற்கு?!

நம்பி ஏமாந்தாகிவிட்டது.  இனி என்ன நினைத்து என்ன?

முகத்தில் சந்தோஷம் முகாமிட சித்ராபதி வந்தாள்.

“மாதவிக் கண்ணே, என்ன யோசனை? கோவலன் வராதது நல்லதற்குத்தான் என்று நினைத்துக் கொள்.  வணிகர் ஒருவர் வந்து வெகு நேரம் காத்திருக்கிறார். பத்து கப்பலுக்குச் சொந்தக்காரராம்.  நாளங்காடியிலுள்ள கடைகளில் பாதி இவருடையதுதானாம்.  உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்.  இன்றொரு நாள் மட்டும்தான் இருப்பாராம்.  நாளை வியாபாரத்துக்காக கிரேக்கம் போய்விடுவாராம்.  அவர் உள்ளம் மகிழும்படி நடந்து கொள்.  இப்படியே போய்விடாதே மாதவி.  ஒப்பனை செய்துக்கொள்.”

சிரித்தாள் மாதவி.

கண்கள் கலங்கின.

” மாதவி, மணிமேகலை யாரென்று கேட்டால், உனக்குத் தங்கை என்று சொல். புரிகிறதா?”

பதில் சொல்லாமல் ஒரு தீர்மானத்துடன் ஒப்பனை அறைக்குள் நுழைந்தாள்.  சில நிமிடங்களில் ஒப்பனை முடித்து வெளியே வந்த மாதவியின் கோலத்தைப் பார்த்த சித்ராபதியின் தலையில் இடி இறங்கியது.

ஆபரணங்களைக் களைந்து, மொட்டை அடித்து, காவி உடுத்தி, துறவியாகக் காட்சி தந்தாள்.

மாதவி துறவியாகிவிட்ட செய்தி நகரின் வீதியெங்கும் வேகமாய் பரவியது.   இனி ஆண்ட வனுக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டாள்.  கடவுள் முன் ஆடுவதற்கு மட்டுமே மாதவியின் கால்கள் சலங்கை கட்டும்.  உலகத்தின் அழகான பெண் துறவியாகி விட்டதில் ஆண்டவனைத் தவிர எல்லோருக்கும் வருத்தம்தான்.