அத்தியாயம்: 24                                                            கைகேயி

 

ராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது.  மகிழ்ந்தது சுற்றமும் நட்பும் மக்கள் குதூகலித்தனர்.  ‘ஆர்த்தனர் களித்தனர் ஆடிப்பாடினர்.’ அரசியல் சதுரங்கத்தில் அவசரமாய் காய்கள் நகர்த்தப்பட்டன.  பரதன் நாடாள்வான்.  ராமன் காட்டுக்குப் போக வேண்டும்’ என்று அடுத்த அறிவிப்பு வந்தது.  இதற்கெல்லாம் காரணம் கைகேயி என்ற விளக்கமும் கூடவே வந்தது.

ராமன் அரசனாகப் போகிறான் என்ற செய்தி அயோத்தி நகரத்துக்கே இனித்தது.  ஒருத்திக்கு மட்டும் வலித்தது.  அவள் கூனி. மந்தரை, கைகேயின் தாதி.

குணத்தால், குழந்தையும் தெய்வமும் ஒன்று.  குழந்தை ராமன் நிஜமாகவே தெய்வம்.  ஆகையால், மந்தரையின் கூனில் மண் உருண்டையால் அடித்தான்.  குற்றம் புரிந்தான்.  இது அறியாப் பருவத்து விளையாட்டு.. இது குற்றமில்லை என்றால்… தாடகை வதம் சந்தேகத்துக்கு உள்ளாகும்.

சட்டப்படி பார்த்தாலும், தர்மப்படி பார்த்தாலும் குற்றத்துக்கு தண்டனை உண்டே உண்டு.  கைகேயின் தாதி என்ற அந்தஸ்தை தவிர,  வேறு அதிகாரம் இல்லாத கூனி ராமனை பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தாள்.  வாய்த்தது வாய்ப்பு.  காய் நகர்த்த அந்தப்புரம் வந்தாள்.

அப்போது கைகேயி உறக்கத்தில் இருந்தாள்.  கால்தொட்டு எழுப்பினாள் கூனி.  கணவன் தசரதன் கண் கண்ட தெய்வமென்றும், கோசலை மைந்தன் ராமன் தனக்கு முதல் மகன் என்றும் எண்ணி வாழும் கைகேயி எண்ணத்தில் கரையானாய் புகுந்தாள்.  அரிக்கத் தொடங்கினாள்.

கூனியின் ஆசைக்கு அத்தனை சீக்கிரமாய் ஒன்றும் கைகேயி தலையாட்டி விடவில்லை.  அதற்கு கூனி நிறைய பாடுபட வேண்டியிருந்தது.

‘எனக்கு நல்லையும் அல்லை நீ என்மகன் பரதன்.

தனக்கு அல்லையும் அல்லை அத் தருமமே நோக்கில்

உனக்கு நல்லையும் அலாள்லவந்து ஊழ்வினை தூண்ட

மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்’

என்று கைகேயி சொல்கிறபோது  ஒன்றை கவனிக்க வேண்டும்.  ” கூனியே, நீ எனக்கோ, என் மகனுக்கோ, உனக்கோ யாருக்கும் நல்லது செய்யவில்லை. ஊழ்வினைத் தூண்டுதலால், இப்படிப் பேசுகிறாய்.  ‘போ’ என் எதிர் நின்று?” என்று சீறினாள்.

இதனால் கூனி வெளியேறி விடவில்லை.  கூனியின் நாவை கைகேயி அறுத்தும் இருப்பாள்.  ‘அவளிடம் உள்ள அன்பாலேயே அவள் நாக்கை அறுக்காதிருந்தேன்’ என்பாள் கைகேயி.  அது கூனிக்கு லாபமாயிற்று.

“ராமன் அரசனாகிவிட்டால் உனக்குத் துணை என்று சொல்வ தற்கு யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.  ராமன் வேறு, பரதன் வேறு என்ற வேற்றுமையைப் புரிய வைத்தாள்.

தாயும் , மகனும் கோசலை தயவில் வாழ வேண்டி வரும் என்று எச்சரித்தாள்.

“உன் உறவினர்கள் வறுமையை உன் தயவால் போக்கிக் கொள்ள லாம் என்ற நிலை வந்தால் உன்னால் என்ன செய்து விட முடியும்.. யோசித்துப் பார்” காலடியில் கிடந்து கெஞ்சினாள் என்றாள்.

“கேகய மன்னனை.. உன் தந்தையை ‘ஜனகன்’ முதலான வேறு அரசர்கள் கொல்வதற்குப் போர் தொடுத்தால் ராமன் அரசனாக இருந்தால், உதவி கிடைக்காது” என்று சொன்னாள்.

ராமனுக்குப் பிள்ளை இல்லை என்றால், பரதன் பட்டத்துக்கு வரமுடியாது.  இலக்குவனே வருவான்” என்று சொடுக்கினாள்.

“கைகேயி, நீ இத்தனை பெரிய அசடாய் இருப்பாய் என்று நான் நினைக்கவேயில்லை.  யோசித்துப் பார். உன் மகன் பரதன் மாமன் நாட்டுக்குப் போயிருக்கும் சமயத்தில் இத்தனை அவசரமாய் அரசன் எதற்கு ராமனுக்கு முடிசூட்டத் துடிக்க வேண்டும்?

இந்தக் கேள்வி கைகேயியை யோசிக்க வைத்தது.

விருந்துக்குப் போயிருக்கும் மகன்கள் பரதன். சத்ருக்கன் வருவதற்கு, ராமனுக்கு முடிசூட்டி விட அப்படி என்ன அவசரம் தசரதனுக்கு?

‘கூனி  கூறுவதில் நியாயம்  இருக்கிறது.  பிறந்த வீட்டுச் சீதன மாய் என்னோடு வந்த தாதி, என் நலனில் அக்கறை மிகக் கொண்டவள். அவளுக்கு இதனால் லாபமில்லை.  எனவே, அவள் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.  கூனி சொன்னபடி, இந்தப் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் விஷம் இருக்கிறது.’

இப்படிப் பல எண்ணினாள்.  ராமனை விரட்டத் திட்டம் தீட்டினாள்.  நள்ளிரவாயிற்று.  தலைவிரி கோலமானாள்.  அலங்காரத்தை தவிர்த்தாள்.  அப்படியே விழுந்து கிடந்தாள்.  காண வந்த அரசன் தசரதன் கைகேயி நிலை கண்டு பதறினான்.

சம்பாகரனுடன் தசரதனுக்கு நடந்த போரில் தன் கைவிரலை தேர்ச்சக்கரத்தின் அச்சாணியாக்கிப் பெற்ற வரத்தை இப்போது பயன்படுத்தினாள்.  தசரதன் கொடுத்த வாக்கை மீற முடியாமல் தவித்தான்.

மும்மூர்த்திகளை ஒத்த – மேலான அருஞ்செயல் ஆற்றுவோன் என்று முனிவரில் முதல்வனான் கோசிகனால் பாராட்டு பெற்ற தசரதன்.. தடுமாறினான்.  ‘அரச சபை கூடி எடுத்த முடிவை மாற்றியமைக்க.. நான் அரசனே ஆனாலும் எனக்கு உரிமை யில்லை’ என்று காதல் மனைவியின் முன்னே சொல்ல இயலாதவன் ஆகினான்.  அரசியல் சட்டத்தை மீறினான்.

‘பரதன் நீ ஆசைப்படி நாட்டை ஆளட்டும்.  இராமன் காட்டுக்குப் போக வேண்டாமே’  என்றான்.  காலடியில் கிடந்து கெஞ்சினேன் க்கொள்.  கைகேயி தன் முடிவில் உறுதியாய் நின்றாள்.  கேட்ட வரத்தை வாங்கிய பிறகே தணிந்தாள்.

கூனியின் ஆசை நிறைவேறியது.  கைகேயி கூனியின் கருவியாய் மட்டும் செயல்படவில்லை.  ராவணன் வதம் நடந்ததாக வேண்டும்.  அதற்கு இராமன் காட்டுக்குப் போயாக வேண்டும்.  அது விதி.  விதிக்கும் கருவியானாள் கைகேயி.  விதி நடத்திய நாடகத்தில்.. பழியேற்க கைகேயி பயன்படுத்தப்பட்டாள்.  நாடகம் அரங்கேறியது.

கேகய நாட்டிலிருந்து அயோத்தி வந்தடைந்த பரதன் நடந்தவை கேட்டுத் துடித்தான்.  தாய் கைகேயியை பேய் என்றான்.  அண்ணனைத் தேடிச் சென்றான்.  வழிமறித்த குகனிடம், சுமித்திரையை லக்குவனின் தாய் என்றும்,  கைகேயியை தன்னை பெற்ற பாவி என்றும் அறிமுகப்படுத்தினான்.

‘ஆயிரம் ராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா’ என்று குகன் படலத்தில் ஓர் இடம் வரும்.  பாவியென்று தாயைப் பேசிய பரதன் இந்தப் பாராட்டுக்குத் தகுதியானவன்தான்.

இங்கு ஒன்றைக் கவனித்து ஆகவேண்டும்.  ‘தாயைப் போல பிள்ளையைச்’ என்றொரு சொல் உண்டு.  பரதன் உத்தமன் என்றால், உத்தமப் பிள்ளையை சுமந்த கர்ப்பப்பையும், தாயும் எப்படிக் கேடாய் அமைய முடியும்? ஆகவேதான் கம்பன், கூனியின் பேச்சால் புத்திகெட்டு நின்ற கைகேயியை ‘தீயவையாயினும் சிறந்த தீயாள்’ என்றான்.

தீமையே என்றாலும் கைகேயி சிறந்த தீமை.  இந்தத்  தீமைக்கு நன்மை செய்யத் தோன்றியது.  மாவலிக்கு விமோசனம் தருவதற்கு திருமால் வாமன அவதாரம் எடுத்தது போன்றது இது.

ஆகவேதான் கம்பன்,

‘கழற்கால் மாயன்

நெடுமையால் அன்று அளந்த உலகெல்லாம்

தன் மனத்தே நினைத்து செய்யும்

கொடுமையால் அளந்தான்’

என்று கைகேயியின் செயலுக்கு மறைமுகமாக ஒப்பிடுகிறான்.

ராமனைப் பிரிந்த தசரதன், துயரத்தால் மாண்டான்.  கைகேயி ஒருத்தியின் செயலால்.  கோசலை, சுமித்திரை உட்பட அறுபதினாயிரம் பெண்கள் விதவையாயினர்.  இந்தப் பழியையும் கைகேயி ஏற்க வேண்டியதாயிற்று.

இதற்கு ஒரு வரலாறு உண்டு.

நீண்ட காலமாய் பிள்ளையில்லாமல் மறுகினான் தசரதன்.  அவனுக்குப் பிள்ளை வரம் சாபத்தின் வடிவத்தில் கிடைத்தது.  அது, தசரதன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்த சமயம்.

அந்தக முனிவரின் மகன் நீர் எடுக்க வந்தான்.  மறைந்து நின்ற தசரதன் யானைதான் நீர் குடிக்கிறது என்று நினைத்து கணை தொடுத்தான்.  மாண்டான் முனிவர் மகன்.  இதையறிந்த முனிவர்.

‘எவா மகவைப் பிரிந்து இன்று

எம்போல் இடர் உற்றனை நீ

போவாய் அகல்வான்’

என்று சாபமிட்டார்.

சாபத்தைக் கேட்டு தசரதன் சந்தோஷம் அடைந்தான். பிள்ளையே கிடையாது என்றிருந்த தசரதனுக்கு பிள்ளை வரப் போகிறானே.  அன்றைய சாபம் மனைவி வழியில் வந்தது.  அதுவும் ‘காலமெல்லாம் கவின்பெறு கைகேயியின் கவர்ச்சியில் சிக்குண்ட கணவன்’ என்று கோசலையால் குறிப்பிடப்பட்ட கைகேயியின் மூலமாய் வாய்த்தது.  இது பேறில்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

ராமனுக்கு அரசர் பதவி என்றதைக் கேள்விப்பட்டதும் கோசலையை விடவும் அதிகம் சந்தோஷப்பட்டவள் கைகேயிதான்.  அதனால்தான், ‘ராமனுக்கு முடிசூட்டப் போகிறார்களாம்’ என்று செய்தி சொன்ன கூனிக்கு முத்துமாலை பரிசளித்தாள்.

உனக்கு ராமனால் பெருந்துன்பம் வரப்போகிறது என்று கூனி சொன்ன போது, ‘ராமனைப் பெற்ற எனக்குத் துன்பம் எப்படி உண்டாகும்?’ என்று கோசலை மகனை தன் மகனாய் கொண்டாடினாள் கைகேயி.

அப்படிப்பட்டவளை விதி கைப்பாவையாக்கிற்று.

விதி நின்று சிரித்தது.

எல்லோருமாய் சேர்ந்து கைகேயி மேல் பழிபோட்டு விட்டார்கள்.  பாவம் கைகேயி!

(முற்றும்)