சென்னை: நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தபோது நடிகர் கருணாஸின் கார் கண்ணாடியை உடைத்த நரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.  இவர், நடிகர் ரித்தீஷ் ஆதரவாளர் என்பது தெரியவந்துள்ளது.

கருணாஸ் - ரித்தீஷ்
கருணாஸ் – ரித்தீஷ்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்துக்கு வந்த சிலரை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள், தாங்களும் உறுப்பினர்கள்தான் என்று உறுப்பினர் அட்டையை காண்பித்தனர்.
ஆனால், “அது பழைய உறுப்பினர் அட்டை. அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டோம்” என்று புதிய நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கூட்டம் நடக்கும் இடத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தற்போதைய சங்க நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தடுத்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர்  லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும், 20 பேரை கைதும் செய்தனர்.
இந்த கலவர சூழலில் சங்க மைதானத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து கருணாஸின் ஆதரவாளர்கள், “காரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,  கண்ணாடி உடைப்பு குறித்து கருணாஸின் கார் டிரைவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கார் கண்ணாடியை உடைத்தவரை தேடி வந்தனர்.தொடர் விசாரணையை அடுத்து இன்று அந்த நபர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவரது பெயர் பிரபு. நடிகர் ரித்தீஷின் ஆதரவாளர் இவர் என்பதும் தெரியவந்தது.
கருணாஸின் ஆதரவாளர்கள் தாக்கியதில் காயம் அடைந்த பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிறகு, தான் தாக்கப்பட்டது குறித்து பிரபு புகார் அளித்தார். அதன்பேரில் கருணாஸின் வழக்கறிஞர் உள்பட பத்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நண்பனே.. நண்பனே..
ஜே.கே. ரித்திஷூம் கருணாஸூம் நல்ல நட்புடன்தான் இருந்தார்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது திருவாடானையில் கருணாஸ் போட்டியிட்டார். அப்போது அவருக்காக ரித்திஷ் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் அதன் பிறகு ஏனோ இருவரிடமும் விலகல் ஏற்பட்டது. இப்போது இவர்களது ஆதரவாளர்கள் பரஸ்பரம் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.