பெங்களூரு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், நேற்று, காவிரி வழக்கில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “பொதுவாக எந்த ஒரு நதிநீர் விவகாரமாக இருந்தாலும், மேலாண்மை வாரியம் அல்லது, கண்காணிப்பு குழு அமைப்பது வழக்கம்தான். காவிரி விவகாரத்தில் கண்காணிப்பு குழு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. ஆகவே, மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும்.

காவிரி பாசன மாநிலங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஒருங்கிணைத்து இதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதாக ஊடகங்களில் தவறாக செய்தி வெளியாகியுள்ளது.

நான், தீர்ப்புக்கு பிறகு கர்நாடக, வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதே தவிர, குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்றனர்” என்று சித்தராமையா தெரிவித்தார்.