கோபத்தில் டில்லி பறந்த கனிமாழி.. சமாதானத்தை அடுத்து இன்று திரும்புகிறார்?!

நியூஸ்பாண்ட்:

“அரசியலோ, குடும்பமோ.. எங்கு பிரச்சினை என்றாலும் தனது சாதுர்யத்தால் தீர்த்துவைத்துவிடுவார் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரால்கூட தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்று கனன்றுகொண்டே இருக்கிறது!” – வருத்தமான குரலில் சொல்லியபடியே தனது இருக்கையில் அமர்ந்தார் நியூஸ்பாண்ட்.

நாம் மவுனமாக இருக்க, அவரே தொடர்ந்தார்:

“கடந்த சில ஆண்டுகளாகவே வயோதிகம் காரணமாக உடல்நலிவுற்றிருந்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவ்வப்போது காவேரி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுவந்தார். வீட்டிலும் சிகிச்சை தொடர்ந்தது.  இடையில் அவருக்கு பேச முடியாமல் போனது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், சிறுநீர் கழிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட, மீண்டும் காவேரி மருத்துவமனை அழைத்துச்செல்லப்ட்டார். பரிசோதித்த மருத்துவர்கள், “வயோதிகம் காரணமாக மிகவும் தளர்ந்திருக்கிறார். சிகிச்சை என்ற பெயரில் அவரைத் தொல்லப்படுத்தவேண்டாம். வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கேயே தகுந்தபடி கவனித்துக்கொள்கிறோம்” என்று  கூறினார்களாம். இதையடுத்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்!”

“ஆமாம்… இதைத் தொடர்ந்துதான் தி.மு.க.வின் பரம வைரியாக பார்க்கப்படும் அ.தி.மு.க. பிரமுகர்களே வந்து கருணாநிதியை நலம் விசாரித்துச் சென்றார்களே..!”

“ஆமாம்! இதற்கிடையே கருணாநிதியின் குடும்பத்தில் பிரச்சினை ஒன்று வெடித்துள்ளது!ட

“என்ன.. என்ன..”

“புதிதாக ஒன்றுமில்லை. ஏற்கெனவே இருக்கும் விவகாரம்தான். அது – கனிமொழிக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அது!”

“ஓ..”

“கருணாநிதிக்கு  உடல் நலிவு ஏற்பட்டபோதே இந்த பிரச்சினை தலையெடுத்தது. கட்சிப் பொருளாளர் பதவி கனிமொழிக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஸ்டாலின் தரப்பில் கனிமொழிக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி அளிக்கலாம் என்று கூறப்பட்டது. அப்போதில் இருந்தே இந்த விவகாரம் நீடித்து வருகிறது!”

“ம்..”

“இடையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் விகாரம் பெரிதான நிலையில் அங்கு பல கூட்டங்களில் கனிமொழி கலந்துகொண்டார். தூத்துக்குடி தொழிலதிபர்கள், நாடார் சங்கங்கள் என்று பல தரப்பினரை சந்தித்தார். அவரது நோக்கம், வரும் பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதுதான். இதற்காக இன்னொரு ஏற்பாடும் செய்தார்!”

“என்ன அது?”

“தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இரு சட்டமன்ற தொகுதிகளில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு கணிசமான செல்வாக்கு உண்டு. தேர்தல் நேரத்தில் அவரும் கனிமொழிக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்று கனிமொழி தரப்பினர் விரும்பினர்.   அதற்காக கிருஷ்ணசாமியையும் சந்தித்தனர். அவரும் ஒப்புக்கொண்டார்.

ஆக, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது என்பதில் கனிமொழி உறுதியாக இருக்கிறார். ஆனால் சில நாட்களுக்கு முன் ஸ்டாலின் தரப்பில், “கனிமொழிதான் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறாரே.. பிறகு என்ன? வேண்டுமானால் மீண்டும் அதே மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பி வைப்போம்” என்று ஒரு பேச்சு நடந்ததாம்.

இது கனிமொழி தரப்பினரின் காதுக்கு வர அவர்கள் அப்செட்.

இவர்கள் தரப்பில், “கனிமொழி சிறப்பாக பேசுகிறார். திராவிட வரலாறு, பகுத்தறிவு குறித்தெல்லாம் குறிப்புகள் இன்றியே அவரால் பேச முடிகிறது. கட்சியிலும் கணிசமானவர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தூத்துக்குடியில் பெருவாரியாக இருக்கும் நாடார் இன மக்களும் அவரை ஆதரிக்கிறார்கள். அவரை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தவதில் தடை என்ன” என்று பொருமுகிறார்கள்!”

“ஓ..!”

“இந்த நிலையில் நேற்றும் இது குறித்த விவாதம் குடும்பத்துக்குள் நடந்திருக்கிறது. “நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம். தலைவர் எதிரிலேயே கனிமொழிக்கு முக்கிய கட்சிப்பதவி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இதை ஸ்டாலின் தரப்பில் காதுகொடுத்து கேட்க தயாராக இல்லை.

இந்த நிலையில்தான்   நேற்று டில்லி பறந்தார் கனிமொழி. இன்று நடக்க இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள செல்கிறார் என்று தகவல் வெளியிடப்பட்டது.

ஆனால் குருபூர்ணிமா என்பதால் இன்று பாராளுமன்றத்துக்கு விடுமுறை என்பது  குறிப்பிடத்தக்கது!”

“ஓஹ்….!”

“இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இருந்து சென்னையில் இருந்து கனிமொழிக்கு தொடர்ந்து அலைபேசி அழைப்புகள்.. குடும்பத்தினரிடமிருந்து! எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்  பேசித்தீர்த்துக்கொள்ளலாம்.  தலைவர் உடல் நலமில்லாத நிலையில் டில்லி பிரமுகர்கள் பலரும்கூட அவரை நலம் விசாரிக்க வருவார்கள். அப்போது உடன் இருப்பது அவசியம் என்று சொல்லப்படவே… இன்று டில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார் கனிமொழி!” என்ற நியூஸ்பாண்ட் பை சொல்லிவிட்டு புறப்பட்டார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kanimozhi-was-consoled-at-delhi-and-coming-back, கோபத்தில் டில்லி பறந்த கனிமாழி.. சமாதானத்தை அடுத்து இன்று திரும்புகிறார்?!
-=-