ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிலம்பரசனின் #STR48 படத்தை கமலஹாசன் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

சிம்பு நடிக்க இருக்கும் இந்தப் படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பது இது முதல்முறை.

அதேபோல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்த திரைப்படம் சிலம்பரசன் நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராக இருக்கும் படம் என்று கூறப்படுகிறது.

சிலம்பரசனின் ‘பத்து தல’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளதை அடுத்து #STR48 படம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது இந்த நிலையில் ராஜ்கமல் நிறுவனத்தின் அறிவிப்பு சிம்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – பிரதீப் ரங்கநாதன் இருவரும் இனைந்து நடிக்கும் படம் தவிர, எச். வினோத் இயக்கும் கமலின் ‘KH233’ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ‘KH234’ என்று வரிசையாக படங்களை தயாரித்து வருகிறது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்.