கமல் பிறந்தநாள்: 64 க்குள் 59 அதிசய ஆண்டுகள்…

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ஜினியின் சந்திரமுகியில் அகிலாண்டேஸ்வரியாக வந்து கலக்கிய ஷீலா, கமலை விட ஒன்பது வயது மூத்தவர்..1963ல் வெளியான எஸ்எஸ்ஆரின் வானம்பாடி படத்தில் இரண்டாவது கதாநாயகியான ஷீலா, ஒன்பது சிறுவன் கமலை தூக்கிவைத்து கொஞ்சுவார்..

பின்னாளில் கதாநாயகனான உருவெடுத்த கமல் அதே ஷீலாவுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து அந்த கேரக்டர்களையே பிரமிப்புடன் பேசவைத்தார். அதாவது ஒரு கலைஞன், பாத்திரமாகவே மாறிப்போனால் அவன் முன்னால் மூத்தவர், இளையவர் என எந்த தடையுமே நிற்காது என்பதற்கு உதாரணம் கமல்..

அவரின் பயணத்தை சற்றே பின்னோக்கி பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாகவே இருக்கும்.. 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் படத்தில் கமல் குட்டி கதாநாயகன் அந்தஸ்த்தில் உதயமானபோது, ஜெயலலிதா, வாணிஸ்ரீ, மஞ்சுளா போன்றோர்  கொடிகட்டிப்பறந்தனர்.

அதற்கப்புறம்,லதா, சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி என ஒரு தலைமுறை.. பிறகு, ராதா, அம்பிகா, ரேவதி  வகையறா ஆடி முடிந்ததும் குஷ்பு,கௌதமி,மீனா, ரம்பா, சிம்ரன், போன்றவர்களின் காலகட்டங்களிலும் கமல் முன்னணி நாயகன். இந்த நடிகைகள் நிலை இன்றைக்கு எப்படி என்று நினைக்கும்போது, திரிஷா, பூஜாகுமாருடன் கமல் ஜோடிபோட்டு அசத்திக்கொண்டிருக்கிறார்.

இந்திய திரை வரலாற்றில் எந்த புள்ளியையும் நேரடியாக இணைத்து கோடு போடக்கூடிய ஒரு மிகப்பெரிய ஒரே ஆளுமை கமல் மட்டுமே.. அவர் பார்த்து பழகாத அந்த காலத்து ஜாம்பவன்களே கிடையாது. தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஜெமினி எஸ்எஸ்ஆருடன் நடித்த கமலுக்கு ராஜ்கபூர், தேவ் ஆனந்த் திலிப்குமார் அமிதாப்பச்சன், ஷாருக்கான் வரை தொடர்புகள் போய்க்கொண்டே இருக்கும்.

உலக அளவில் இன்றைக்கும் மாபெரும் காவியமாக பேசப்படும் குருதத்தின் பியாசா (1957) இந்தி படத்தை எடுத்துக்கொண்டால் அதில் கதாநாயகிகளாக நடித்த இந்தி திரையுலக லேடி சூப்பர் ஸ்டார் வஹீதா ரெஹ்மான் விஸ்வரூபம் படத்தில் கமல் என்ற புள்ளியோடு இணைவார்.

இன்னொரு லேடி சூப்பர் ஸ்டார் மாலா சின்ஹா, 1977ல் கபிதா என்ற பெங்காலி படத்தில் கமலோடு இணைவார். அவள் ஒரு தொடர்கதை படத்தின் வங்காள வெர்ஷன் அது. அந்த படத்திலும் விகடகவி ரோலில் கமல் நடித்திருப்பார்.

அவள் ஒரு தொடர்கதை தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி பெங்காலி என ஐந்து மொழிகளில் படமாக்கப்பட்டது.. அதில் நான்கு படங்களிலும் விகடகவி, பஸ்கண்டக்டர், ஆபிஸ் மானேஜர் என தயக்கமே  இல்லாமல் ஈகோ பார்க்காமல் கமல் வெவ்வேறு ரோல்களை செய்திருப்பார்..

கமலுடன் நடித்த பல இளம் கதாநாயகிகளெல்லாம் அவருக்கே படத்தில் அம்மா ரோலுக்கு போய் சேர்ந்தார்கள்  அபூர்வ ராகங்கள், ஸ்ரீவித்யா, நிழல் நிஜமாகிறது சுமித்ரா, அவர்கள் சுஜாதா அலாவுதீனும் அற்புத விளக்கும் ஜெயபாரதி என அது ஒரு தனி பட்டியல்.

விஸ்வரூபம் முதல் பார்ட்டில் பூஜா குமாருக்கு உளவியல் நிபுணராக வந்து ஆலோசனை சொல்லும் அந்த வயதான பெண்மணி நடிகை ஜரினா வஹாப் என்பதும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரும் மதனோற்சவம் என்ற கமல் படத்தின் கதாநாயகி என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்..

இன்று உலக நாயகன் என்று பிரமிப்புடன் பேசப்படும் கமலின் ஆரம்பகாலம், குழந்தைப்பருவத்திற்கே நேர் எதிரான ஒரு காட்டாறாகவே இருந்தது..

காங்கிரஸ் தலைவர்களுடன் பெரும் நட்புகொண்ட பரமக்குடி சீனுவாசன் என்ற வழக்கறிஞரின் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் கமல்.

பெற்றோர் சொற்படி கேட்டு நடந்து படித்து அவரது இரண்டு சகோதரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள். ஆனால் கடைக்குட்டியான  கமல் சென்ற பாதையோ நடனம், நடிப்பு கதை என முற்றிலும் நேர்மாறானது.

பள்ளிப்படிப்பைக்கூட முழுதாக முடிக்கமுடியாத அந்த கமல்தான், சென்னை அமெரிக்க துணை தூதரகத்திற்கு பேட்டி அளித்தபோது வித்தியாசமான பரிணாமத்தை காட்டினார்.

பேட்டி எடுத்தவர், அந்தக்காலத்து ஹாலிவுட் ஜாம்பவான்களான மார்லன் பிராண்டோ மற்றும் ஜான் வெயின் ஆகியோரின் புகழ்பெற்ற வசனங்களை பேசச்சொன்னபோது, அதே மாடூலேஷனில் அப்படியே பேசிக்காட்டி அசத்தினார்.

அந்த அளவிற்கு அவருக்குள் திரை ஆர்வம் ரத்தத்தோடு ஊறிவிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. காரணம், கமல் பயிற்சி எடுத்துக்கொண்ட பட்டறைகள் அப்படி.

5 வயதில் நடிக்க ஆரம்பித்து 1960ல் கமலின் முதல்படம் களத்தூர் கண்ணம்மா வெளியானது. காலத்தால் அழிக்கமுடியாத காவியங்களை சிவாஜிக்காக இயக்கிய ஏ.பீம்சிங்தான் கமலை முதலை இயக்கியவர். உதவி இயக்குநராக இருந்த எஸ்பி முத்துராமன்தான் பின்னாளில் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி என கமலின் வசூல் மழை படங்களை இயக்கி ரஜினிக்கு பாக்ஸ் ஆபிஸ் போட்டியாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர் என அவரின் குழந்தை நட்சத்திர படப்பட்டியல் டாப் ஸ்டார்களுடன் ஏறுமுகமாவே அமைந்தது ஒரு மாஜிக் என்றே சொல்லலாம்.

பார்த்தால் பசி தீரும் படத்தில் இரட்டை வேடத்தில் சிறுவனாக அசத்திய கமலை, அப்போதே மலையாளம் அள்ளிக்கொள்ள தவறவில்லை.

சிறுவயதில் நட்சத்திரங்களாய் மின்னுபவர்கள் வயது ஏறஏற ரெண்டுங்கெட்டான் நிலையை சந்தித்து தடைபடுவார்கள். 9 வயது கமலுக்கும் அப்படியொரு கட்டம் வந்தது.

இளைஞனான பிறகு ஒப்பனிங்கே கிடைக்காமல் அல்லாடிய கமலுக்கு, முதன் முதலில் தலைகாட்ட உதவியது சின்னப்பா தேவரின் மாணவன்(1970) படம். விசிலடிச்சான் குஞ்சுகளா என குட்டி பத்மினியுடன் பாடலுக்கு ஆடினார்.

குறத்திமகன் போன்ற படங்களில் துண்டு ரோல்களில் வந்துபோவதை இன்று பார்க்க நேரிடும்போதுதான், கமல் எவ்வளவு முட்பாதைகளை கடந்திருக்கிறார் என்பது புரியும்..

நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என எந்த பொழுதையும் அவர் வீணடித்ததில்லை.. தங்கப்பன் டான்ஸ் மாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தார். ஆனந்த ஜோதியில் எம்ஜிஆருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதே கமல், 1972ல் நான் ஏன் பிறந்தேன் படத்தில் அசிஸ்டண்ட் டான்ஸ் மாஸ்டராக எம்ஜிஆருக்கு நடனம் சொல்லித் தந்தார். ஜெயலலிதாவையும் நடனத்தால் ஆட்டிவைத்த கமல், அவரோடும் வேளாங்கண்ணி, அன்புத்தங்கை உன்னைச்சுற்றும் உலகம். போன்ற படங்களில் நடித்தது இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

இளைஞனாக வளர்ந்து கதாநாயகன் வேடத்தை வெறித்தனமாக தேடிக்கொண்டிருந்த கமலுக்கு கே. பாலசந்தர் அரங்கேற்றம் படத்தில் வாய்ப்பு கொடுத்தாலும் சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவன் இல்லை (ஜெமினி கணேசன் தயாரித்தது) போன்ற படங்களில் ஹீரோ ரோல் கொடுக்கவேயில்லை.

எம்ஜிஆர் சிவாஜி சகாப்தம் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இப்படி தத்தளித்த கமலை, முதன் முதலில் உரிய அங்கீகாரம் கொடுத்து வாரி தழுவிக்கொண்டது மலையாள உலகம்தான்.

1962ல் கண்ணும் கரளும் படத்தில் கமலை இயக்கும்போதே கே.எஸ்.சேதுமாதவனுக்கு சிறுவனின் திறமை தெரிந்திருக்கும்போல.. அவர்தான் கமலை 1974ல் கன்யாகுமாரி படத்தின் கதாநாயகனாக்கி  மலையாள படவுலகின் நடிப்பு பரிமாணங்களை அடுத்தடுத்து பெற்றுக்கொள்ள  வழிவகுத்துத்தந்தார். முதல் பிலிம்பேர் அவார்டை கமலுக்கு பெற்றுத்தந்த படம் அது.

அதே கமல்தான் ஒரு கட்டத்தில் இனிமேல் எனக்கு விருதே கொடுக்காதீர்கள் என்று பிலிம்பேர் பத்திரிகை குழுமத்திற்கு கோரிக்கை வைக்கும் அவருக்கு தொடர்ந்து விருதுகளாய் வாரி வாரி வழங்கியது

நாயகன், அபூர்வ சகோதரர்கள், குணா, தேவன் மகன், குருதிப்புனல் என   விஸ்வ ரூபம் எடுத்த கமலின் ஹீரோ பயணம், பல்வேறு பரிட்சைகளை செய்துபார்த்துதான் வளர்ச்சி பெற்றது. 

பாகப்பிரிவினையில் சிவாஜி செய்த ஒற்றைக்கை ரோலை அந்த படத்தின் டைரக்டரான ஏ.பீம்சிங், கமலுக்கு வேறு மொழியில் செய்யச்சொன்னார். பாரதிராஜாவோ ஒற்றை கோவணத்தை மட்டுமே தந்து 16 வயதினிலே படத்தில் நடந்துபோகச்சொன்னார்.

உணர்ச்சிகள் படத்தில் எந்நேரமும் செக்ஸ் வெறியில் திளைக்கும் இளைஞன் கடைசியில் பாலியல் நோயக்கு ஆளாவது மாதிரியான கேரக்டரெல்லாம் கமல் திரையுலக வாழ்வில் பிரமிப்பையே பிரமிக்க வைக்கும்..

(அடுத்த பகுதியில் நிறைவடையும்)

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Kamal birthday-special-article- -59-wonders in -64-years, கமல் பிறந்தநாள்: 64 க்குள் 59 அதிசய ஆண்டுகள்…
-=-