சென்னை:

கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, குடும்பத்தில் ஊடலும், கூடலும் இருக்கத்தான் செய்யும்…என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து,  மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் மற்றும், ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை முழுவதுமாக புறக்கணித்ததைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்   காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், திமுக கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதாகவும், ஒன்றிய ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களை தராதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தெரிவித்திருந்தனர்.

இந்த அறிக்கை திமுக காங்கிரஸ் இடையே இருந்து வந்த புகைச்சலை மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவிடம் பேசி, நடந்ததற்கு வருத்தம் தெரிவித்ததுடன்  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தது.

ஆனால், திமுக தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியும் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர்  கே.ஆர்.ராமசாமி, மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, திமுக – காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி ஸ்டாலினுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். மேலும், கூட்டணியில் எந்தகுழப்பமும் இல்லை என்று கூறியவர், ,;ej  விவாதம் கருத்து வேறுபாடு ஆகிவிடாது; எங்களது கூட்டணி  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும்  தொடரும் என்றார்.

அப்போது செய்தியாளர்கள் துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அழகிரி, ரஜினி நல்லவர், அவர் முரசொலியையும், துக்ளக்கையும் சேர்ந்து பேசியது தவறு… அவர் வாய் தவறி கூறியிருப்பார் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.