அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அங்கு இன்றுவரை நாள்தோறும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்கின்றது.

இந்த நிலையில் போலந்து தலைநகர் வார்சா-வில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து செல்வதாக அறிவிக்கப்பட்டது.

போலந்தை ஒட்டிய அண்டை நாடான உக்ரைன் செல்லவிருப்பது வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

அதிபரின் பயணம் குறித்து இன்று அதிகாலை வெளியான செய்தி குறிப்பில் கூட நாளை அவர் வார்சா செல்ல இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இன்று பிற்பகல் திடீரென உக்ரைன் தலைநகர் கிவ் வந்திறங்கிய அதிபர் பைடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி-யை சந்தித்து பேசியதோடு ரஷ்ய படைகளை சமாளிக்க தேவையான உதவிகளை செய்வதாக அவரிடம் உறுதியளித்தார்.

மேலும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா அதிபர் புடின் தப்பு கணக்கு போட்டுவிட்டதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.

சில மணி நேரங்களே நீடித்த இந்த சந்திப்பின் இடையே தனது வருகையை அங்குள்ள பதிவேட்டில் ஜோ பைடன் குறிப்பிடதவறவில்லை.

இந்த நூற்றாண்டில் போர் நடைபெறும் நாட்டிற்கு பயணம் செய்த முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு போலந்து சென்ற பைடன் அங்கு நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்.

அமெரிக்க அதிபரின் இந்த ரகசிய பயணம் குறித்து உக்ரைனுக்கு அதிக முன்னுரிமை தரப்படுவதாகவும் சொந்த நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதாகவும் அமெரிக்க எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் நாளை ஜோ பைடனின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று உலகமே அச்சத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.