மும்பை,

மும்பையிலிருக்கும் ஜின்னாவின் வீட்டை இடித்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பரப்பும் கட்டடம் எழுப்ப வேண்டும் என பாஜக எம்எல்ஏ மங்கள் பிரபாத் லோதா பேசினார். கடந்த மார்ச் 25ம் தேதி மஹாராஷ்ட்ர சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை தொடர்பான விவாதம் நடைபெற்றது.

அதில் பங்கேற்றுப் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மங்கள் பிரபாத் லோதா, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவதற்காக நடைபெற்ற சதி ஆலோசனைகள் எல்லாம், தெற்கு மும்பையில் இருக்கும் ஜின்னா இல்லத்தில்தான் நடைபெற்றதாக கூறினார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட எதிரிகள் சொத்து சட்டத்தின் படி ஜின்னாவின் இல்லம் இந்தியாவுக்கு உடமையாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் ஜின்னா வாழ்ந்த வீட்டை இடித்துவிட்டு மஹாராஷ்ட்ராவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டடம் எழுப்ப வேண்டும் என்று லோதா கோரிக்கை விடுத்தார்.  

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான்,  ஜின்னாவின் வீடு எங்கள் நாட்டின் சொத்து என்றும் தங்களிடம் ஒப்படைத்து விடும்படியும் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக

இஸ்லாமாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நவீஷ் ஜாக்கிரியா, மும்பையில் இருக்கும் வீடு பாகிஸ்தான் நாட்டின் தேசிய தலைவர் முகமது அலி ஜின்னாவுடையது என்றார்.

அந்த வீட்டை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதாக பலமுறை இந்தியா கூறியிருப்பதையும்  நினைவுகூர்ந்த அவர், இந்தியா அந்த உறுதிமொழியை காப்பாற்றவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அதேநேரம் ஜின்னாவின் இல்லத்தை இந்தியா பாதுகாக்கும் என்று, பாகிஸ்தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.