ராஞ்சி:

ஜார்கண்டில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 3வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட்டுகள் அச்சுறுதல்களையும் மீறி மக்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில  சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற்றது. 2வது கட்ட வாக்குப்பதிவு 20 தொகுதிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று 3வது கட்ட வாக்குப்பதிவு 17 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று வருகிறது. காலை  7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பிற்பகல் மூன்று மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் சுமார் 309 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 56 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்குகள் பதிவு செய்கின்றனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 17 தொகுதி களில் 12 தொகுதிகள் மாவோயிஸ்ட்டு அச்சுறுத்தல் மிக்க பதற்றமான தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் போலீசார், துணை ராணுவப் படையினர் உட்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

4வது கட்ட வாக்குப்பதிவு வரும்16ம் தேதியும் இறுதி 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23ம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும்.