ஹைதராபாத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் போலீஸாக நடித்து ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

notes3

பழைய ரூபாய்நோட்டு தடையையடுத்து பலரும் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 நோட்டுக்களை சில்லறையாகவோ அல்லது புது நோட்டுகளிலோ மாற்ற முயன்று வருவது நாம் யாவரும் அறிந்ததே! பெருமளவு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் மாற்ற வழியறியாது அங்கலாய்த்து வருகின்றனர். கடந்த செவ்வாயன்று ஹைதராபாத்தை சேர்ந்த நகை வியாபாரியான தீபக் என்பவர் 50 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுக்களை காரில் எடுத்து ஆட்டாப்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு நபரை சந்திக்க சென்றிருக்கிறார்.
போகும் வழியில் போலீசார் நிற்கவே வேறு வழியில் சென்று அந்த நபரை சந்தித்த தீபக்கிடம் அந்த நபர், வங்கிகள் விடுமுறையாதலால் இன்று மாற்ற முடியாது, போலீஸ் கெடுபிடி வேறு அதிகமாக இருப்பதால் நாளை (புதன்) மாற்றித்தருகிறேன் என்று சொல்ல தீபக் காரில் உள்ள பணத்துடன் வந்த வழியே திரும்பியிருக்கிறார். அப்போதுதான் தன்னை இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடருவதை கவனித்திருக்கிறார்.
சிறிது தூரம் கடந்து வந்தவுடன் இருவரும் தீபக்கின் காரை நிறுத்தி தங்களை போலீஸ் என்று அடையாளப்படுத்திக்கொண்டு காரில் உள்ள பணம் பற்றி விபரம் கேட்டிருக்கின்றனர். இந்தப் பணத்துக்கு 200% வரி கட்ட வேண்டும் என்று அவரை மிரட்டியுள்ளனர். அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள அவர்கள் முயன்றபோது அதை தீபக் தடுக்கவே அவர்கள் பணத்தை அவரிடமிருந்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிவிட்டதாக தெரிகிறது.
பணத்தை பறிகொடுத்த தீபக் போலீசாரின் உதவியை நாடியுள்ளார். போலீசார் வேடத்தில் வந்தது யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட நபர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.