ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமணி ஆசிரியர் மன்னிப்பு கோரியதாகவும், கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜீயர் அறிவித்துள்ளார்.

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து திரைப்படாலாசிரியர் வைரமுத்து தினமணி இதழில் எழுதிய கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்கட்டுரையில் ஆண்டாளை “தாசி” என வைரமுத்து குறிப்பிட்டுவிட்டதாக இந்ததுத்தவவாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்ட பலர் வைரமுத்துவை மிகவும் இழிவாக விமர்சனம் செய்தனர். பிரபல சாமியரா நித்தியானந்தாவின் சீடர்களும் மிக ஆபாசமாக வைரமுத்துவை விமர்சித்து வருகின்றனர்.

வைரமுத்து, தான் ஆண்டாளை இழிவு செய்யவில்லை என்றும் வேறு ஒரு அறிஞர் தாசி என குறிப்பிட்டதை கோடிட்டு காட்டியதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் வைரமுத்து மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதோடு நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ஜீயர் “ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு வந்து வைரமுத்து, அக்கடுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கோரி உண்ணாவிரதம் இருந்தார். இதை இரண்டாவது நாள் திரும்பப் பெற்றார்.

பிறகு, இதோ கோரிக்கையை வலியுறுத்தி பிப்.4ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் சந்நிதிக்கு சென்றார். ஜீயரையும் சந்தித்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜீயர், ஆண்டாள் சந்நிதியில் வைத்தியநாதன் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். மேலும் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் அறிவித்தபடி பிப்.4ம் தேதி போராட்டம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.